வாட்சாப் அக்கவுண்ட்டை வாடகைக்கு விட்டு காசு பார்த்த இளைஞர்.. வீடுதேடி வந்த காவல்துறை : திகைக்க வைக்கும் பின்னணி!!

277

திண்டுக்கல்…..

திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர் தனது வாட்சாப் கணக்கை வாடகைக்கு விட்டு சம்பாதித்துவந்த நிலையில், அவரை மோசடி வழக்கு ஒன்றில் கொல்கத்தா காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

கொல்கத்தாவை சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் ஆன்லைன் மூலமாக கடன் வாங்க முடிவெடுத்திருக்கிறார். இந்நிலையில், இதுகுறித்து ஒரு இணைய தளத்தில் அந்தப் பெண் விண்ணப்பித்திருக்கிறார்.

அடுத்த சில நாட்களில் அந்த பெண்ணிற்கு ஒருவர் போன் செய்திருக்கிறார். அப்போது தான் கடனாக ஒன்றரை லட்சம் தருவதாகவும் அதற்குரிய ஆவணங்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை அனுப்பும்படியும் அந்த ஆண் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து பெண்மணியும் ஆவணங்களை வாட்சாப்பில் அனுப்பியுள்ளார்.

அடுத்த சில மணி நேரங்களில் பெண்ணுடைய அக்கவுண்டில் ஒன்றரை லட்சம் பணம் ஏறியிருக்கிறது. அப்போது மீண்டும் போன் செய்த அந்த ஆண், ஓடிபி எண்ணை கூறுமாறு கேட்டுள்ளார். இதனையடுத்து அந்த பெண் தனது மொபைலுக்கு வந்த ஓடிபி எண்ணை கூறியுள்ளார். அப்போதுதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சில நிமிடங்களில் வங்கி கணக்கில் இருந்த ஒன்றரை லட்சம் பணம் காணாமல் போயிருக்கிறது.

இதனை தொடர்ந்து அவருக்கு மோசமாக சித்தரிக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் அந்த மோசடி ஆண் அனுப்பியிருக்கிறார். இதனால் பெண் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளார். மேலும், 3 லட்ச ரூபாய் கொடுக்கவில்லை என்றால் இந்த புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிடுவேன் என மோசடி நபர் தெரிவித்திருக்கிறார்.

பணம் கொடுக்க பெண் மறுக்கவே, சமூக வலை தளங்களில் சித்தரிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை மோசடி நபர் பதிவிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்மணி காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்திருக்கின்றார். இந்நிலையில், பெண்ணுடன் பேசிய நபருடைய மொபைல் எண்ணை காவல்துறை அதிகாரிகள் பரிசோதிக்கும் போது அந்த எண் தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கல்லை சேர்ந்தவர் ஒருவருடையது என்பது தெரியவந்திருக்கிறது.

இதனையடுத்து திண்டுக்கல் வந்த கொல்கத்தா போலீசார், அந்த எண்ணின் உரிமையாளரான ராஜேந்திரன் என்பவரை விசாரித்திருக்கின்றனர். அப்போது அவர் கூறியதை கேட்டு, கொல்கத்தா காவல்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்னதாக ராஜேந்திரனை தொடர்புகொண்ட ஒருவர் அந்த எண் தனக்கு வேண்டும் என கேட்டுள்ளார்.

ஆனால், அதற்கு ராஜேந்திரன் மறுத்துவிடவே, அந்த எண்ணில் வாட்சாப் மட்டும் உபயோகித்துக்கொள்ள அனுமதி கேட்டிருக்கிறார். அதற்கு கணிசமான பணமும் தருவதாக அந்த மர்ம ஆசாமி கூறியுள்ளார்.

பணத்திற்கு ஆசைப்பட்டு ராஜேந்திரனும் தனது எண்ணில் வாட்சாப் உபயோகித்துக்கொள்ள அவருக்கு அனுமதி அளித்துள்ளார். இதற்காக கணிசமான தொகை ஒன்றும் ராஜேந்திரனுக்கு கிடைத்திருக்கிறது.

இந்நிலையில், கொல்கத்தா போலீசார், இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராஜேந்திரனை கைது செய்து வேடசந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அதன்பிறகு ராஜேந்திரனை கொல்கத்தாவிற்கு அழைத்துச் சென்றுள்ள காவல்துறை அதிகாரிகள், இதுகுறித்து தொடர்ந்து விசாரணையில் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

வாட்சாப் கணக்கை வாடகைக்கு விட்டு சம்பாதித்த தமிழக இளைஞர், கொல்கத்தா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட சம்பவம் திண்டுக்கல் முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.