11 பேர் இதற்காகத் தான் தற்கொலை செய்து கொண்டனர் : சிசிடிவி காட்சிகள் மூலம் வெளியான உண்மை!!

1163

இந்தியாவில் மர்மமாக இறந்து கிடந்த 11 பேரும் மூடநம்பிக்கையின் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியாகியுள்ளது.

டெல்லி புராரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் 11 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. எப்போதும் போல் இது ஒரு தற்கொலையாகத் தான் இருக்கும் என்று பொலிசார் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை ஆரம்பிக்கப்பட்டவுடன், சில நம்பமுடியாத தகவல்கள் எல்லாம் வெளிவந்தன. ஆம் இவர்கள் மூடநம்பிக்கையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும், அதற்காக வீட்டில் இருந்து ஆத்மா வெளியேற 11 குழாய்களை வீட்டிற்கு வெளியில் வரும் படி செட் செய்துள்ளார்கள் எனவும் கூறப்பட்டது.

இதற்கிடையில் அந்த வீட்டில் நிறைய கடிதங்கள், டைரிகள் கைப்பற்றப்பட்டது.

அதில் எப்படி தற்கொலை செய்தால் மோட்சம் கிடைக்கும், எந்த நேரத்தில் தற்கொலை செய்ய வேண்டும் என்றெல்லாம் எழுதப்பட்டிருந்தது.

இதனால் இது கொலையா, தற்கொலையா என்று தெரியாமல் பொலிசார் குழம்பி போய் நின்றனர். மேலும் இவர்களின் உடற்கு கூறு ஆய்விலும் கொலை செய்யப்பட்டதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

மூடநம்பிக்கையின் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் பொலிசாருக்கு நிலவியதால், சாமியார்கள் யாரும் தலையிட்டிருக்கிறார்களா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால் இந்த சம்பவத்தில் சாமியார்களின் தலையீடு இல்லை என்று பொலிசார் உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து இறந்தவர்களின் உறவினர்கள் 20 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் அது குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை. இறந்த 11 பேர் விவகாரத்தில் shared psychosis என்ற நோயின் தாக்கம் இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்தது.

இந்நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரும் மூட நம்பிக்கையால் தற்கொலை செய்தது பக்கத்துவீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சி மூலம் உறுதியாகியுள்ளது.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்க்கையில் இதில் பிறரது குற்றம் எதுவும் இல்லை என்பது தெரிகிறது எனவும் பொலிசார் கூறியுள்ளனர்.

சிசிடிவி காட்சியின்படி 10 மணியளவில் அந்த குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் 5 நாற்காலிகளை எடுத்து வந்துள்ளார்,

சிறுவர்கள் கயிறு எடுத்து வந்துள்ளனர். அவர்கள் சொர்க்கத்தை அடைய வேண்டும் என்ற மூடநம்பிக்கையிலே இதனை செய்துள்ளனர் என்பதை காட்சிகள் உறுதிபடுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.