6 திருமணம்… முதலிரவு முடிந்ததும் சுவிட்ச் ஆப் : மோசடி பெண்ணின் சோக கதை!!

1672

நாமக்கல்….

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் தனபால். இவருக்கும் மதுரையை சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும் கடந்த 7-ம் தேதி திருமணம் ஆனது. திருமணத்தை மதுரையை சேர்ந்த புரோக்கர் பாலமுருகன் ஏற்பாடுகள் செய்திருந்தார். திருமணத்திற்கு பெண் வீட்டார் சார்பில் பெண்ணின் அக்கா, மாமா என இருவர் மட்டுமே வந்திருந்தனர். அவர்களும் புரோக்கரும் திருமணம் முடிந்த கையோடு புரோக்கர் கமிஷன் ரூ 1.50 லட்சத்தை கையோடு வாங்கி சென்றனர். தனபாலும் திருமணம் முடிந்ததால் புது வாழ்க்கையை துவக்கினார்.

இந்நிலையில் கடந்த 9-ம் தேதி தனபாலின் வீட்டில் இருந்து சந்தியா மாயமானார். அவரது செல்போன் எண்ணிற்கு அழைத்து தனபால் அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது கண்டு சந்தேகமடைந்தார்.

அப்போது, வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்த போது அதிலிருந்த நகைகள் மற்றும் திருமண புடவைகள் ஆகியவை மாயமாகி உள்ளது. இதனையடுத்து சந்தியாவின் உறவினர்கள் மற்றும் புரோக்கர் பாலமுருகன் ஆகியோருக்கு தொடர்பு கொண்டபோது அவர்களது எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து தனபால் பரமத்திவேலூர் போலீசில் புகார் அளித்தார்.

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்த போது மதுரையை சேர்ந்த புரோக்கர் தனலட்சுமி என்பவர் மூலம் மீண்டும் சந்தியாவின் புகைப்படம் வந்துள்ளது. இதனை அறிந்த தனபால் திட்டம் தீட்டி மோசடி கும்பலை வரவழைக்க முடிவு செய்தார்.

அதன்படி, புரோக்கர் தனலட்சுமியிடம் பேசி திருமணத்தை திருச்செங்கோட்டில் நடத்தலாம் என முடிவு செய்தனர். அதனால் நேற்று மணப்பெண் கோலத்தில் சந்தியா, புரோக்கர் தனலட்சுமி, அவரது உறவினர் அய்யப்பன் மற்றும் ஜெயவேல் ஆகியோர் காரில் வந்து திருச்செங்கோட்டில் இறங்கினர். அப்போது அவர்களை சுற்றி வளைத்த தனபால் மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேரையும் பரமத்திவேலுார் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

போலீசார் விசாரணையில் சந்தியா கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சிகரமான இருந்தது. மதுரையைச் சேர்ந்த புரோக்கர் பாலமுருகன் அவரது கூட்டாளிகள் மாரிமுத்து, ரோஷினி ஆகிய மூவரும் சேர்ந்து என்னை நிர்வாணப்படுத்தி வீடியோ, புகைப்படம் எடுத்தனர். அதை காட்டி என்னை மிரட்டி, திருமண மோசடியில் ஈடுபட வேண்டும் இல்லையென்றால் வீடியோ இன்டர்நெட்டில் கசிந்துவிடும், பிள்ளைகளை கொண்டு விடுவோம் என்று மிரட்டினர். நானும் மானம் போய்விடுமோ என்று அவர்களுடன் மோசடியில் ஈடுபட்டேன்.

அதற்காக தனியாக ஒரு வீடு வாடகைக்கு எடுப்பார்கள். எனக்கு தாய், தந்தை யாரும் இல்லை என்பதால் அக்கா – மாமாவாக ரோஷினியும், மாரிமுத்துவும் நடிப்பார்கள். என்னை பெண் பார்க்க வரும் இளைஞருடன் நான் நெருக்கமாக வேண்டும் என்றும் பாசமாக பேசி திருமணத்தை ஓகே செய்ய வைக்க வேண்டும் என்பதுதான் எனக்கு கொடுக்கப்படும் டாஸ்க்.

திருமணம் நடந்தால் இரண்டு நாட்கள் மாப்பிள்ளை வீட்டில் இருக்க வேண்டும். அதற்கு பிறகு பொருட்களை சுருட்டிக்கொண்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிடுவேன். அங்கு எனக்காக ஒரு கார் தயாராக இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் முதலிரவு முடிந்ததும் ஓடி வந்துவிடுவேன்.

இல்லையென்றால் இரண்டு நாட்கள் மாப்பிள்ளை வீட்டில் சகஜமாக தங்கிவிட்டு வருவேன். முதலிரவு அன்று இரவே ஓடிவர எனக்கு உத்தரவிட்டால் மாப்பிள்ளைக்கு கொடுக்கும் பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துவிடுவேன் என்றும் இவர்களது மிரட்டலால் இதுவரை 6 திருமணம் செய்துள்ளேன் என்றும் சந்தியா கூறியது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், மேலும் புரோக்கர் கமிஷன் தொகையை மற்ற அனைவரும் பங்கிட்டுக் கொள்வார்கள். எனக்கு குறைவாகத்தான் கொடுப்பார்கள் என சந்தியா கூறினார்.

இதனையடுத்து மோசடி பெண் சந்தியா, பெண் புரோக்கர் தனலட்சுமி, அவரது உறவினர் அய்யப்பன் மற்றும் காரை ஓட்டி வந்த ஜெயபால் ஆகியோரை பரமத்திவேலுார் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். மேலும் மற்றொரு புரோக்கர் பாலமுருகனை போலீசார் தேடி வருகின்றனர்.