ஜோடி ஆப் மூலம் திருமணமான ஆண்களை குறிவைக்கும் பெண் : கல்யாணமான அடுத்த நாளே நேர்ந்த சம்பவம்!!

1456

சேலம்….

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகே உள்ள சாணாரப்பட்டி பகுதியை சேர்ந்த செந்தில்(48)லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரம்யா கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார். இதனால் தனது 12 வயது மகனை பார்த்து கொள்வதற்காக செந்தில் மறுமணம் செய்ய முடிவெடுத்தார்.

பல்வேறு இடங்களில் தேடி மணப்பெண் கிடைக்காததால், ஜோடி ஆப் மூலம் பெண் தேடியுள்ளார். இதனிடையே அதே செயலியில் லதா என்னும் பெண், தான் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் என்றும், தான் கணவரை இழந்து வாழ்வதாகவும், தனக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியை இழந்த வரன் வேண்டும் என பதிவிட்டு இருந்துள்ளார். இதனை கண்ட செந்தில் அவருக்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இருவரும் போனில் பேசி வந்த போது, அந்த பெண் தனது உண்மையான பெயர் கவிதா என்றும், தனக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தான் கணவர் வீட்டாருக்கு பணம் கொடுக்க வேண்டியிருப்பதால், தன்னையும் தன் தாயையும் அடைத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய செந்தில், கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திய கவிதா, தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். கவிதா பிரச்சனையில் இருப்பதாக நினைத்து செந்திலும் உடனடியாக திருமணம் செய்து அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வீட்டில் இருந்த நகை, பணத்தை எடுத்து கொண்டு ஒரே நாளில் வெளியேறியுள்ளார்.

இது குறித்து கவிதாவிடம் கேட்ட போது, தனது தாயார் நியாபமாக இருப்பதாகவும், அவரை அழைத்து கொண்டு சிறுது நாட்களில் வந்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பி இருவரும் செல்போனிலேயே உரையாடி வந்துள்ளனர். மாதங்கள் செல்ல செந்திலின் ஆதார் எண்ணை பயன்படுத்தி அவர் கடன் பெற்றிருப்பதை கண்டறிந்தார் செந்தில். இது குறித்து கவிதாவிடம் கேட்ட போது அவர் தலைமறைவாகியுள்ளார்.

இதனால் தான் ஏமாற்றமடைந்ததை உணர்ந்த செந்தில், இது குறித்து சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கொங்கணாபுரம் போலீசார் தலைமறைவான பெண் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அவர் கோயமுத்தூர் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இதே போன்று நூதன மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.