முகப்பருவை எளிதில் நீக்கும் இயற்கை ரகசியங்கள்!

704

இளமைப் பருவத்தில் ஆன்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பதால், சீபமும் அதிகமாகவே சுரக்கிறது. இதனால், முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகரித்து முகப்பருவை உண்டாக்கி விடுகின்றது.

இதற்காக நாம் பல முயற்சிகளை இன்று வரையிலும் செய்து கொண்டு தான் இருக்கின்றோம். ஆனால் பண்டைய காலத்து பெண்கள் தங்களது முக அழகினை தக்க வைத்துக் கொள்ள இயற்கை முறையினை கையாண்டு முகத்தை ஜொலிக்க வைத்து உள்ளனர்.

நாமும் இயற்கை முறையில் முகப்பருவை நீக்க என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

ஒரு ஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறை, ஒரு ஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து அதை முகத்தில் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு துடைத்து விடவும். இது சருமத்தில் உள்ள எண்ணெய் நீங்கி பருக்கள் வராமல் பாதுகாக்கும்.

வேப்பிலை பொடி, துளசி பொடி, புதினா பொடி ஆகியவை தலா ஒரு டீஸ்பூனும், முல்தானிமெட்டி இரண்டு ஸ்பூன்களும் எடுத்துக் கொள்ளவும். பின் அதை மிதமான சுடுநீரில் கலந்து முகப்பருக்களில் தடவவும். இந்த கலவையை கண்களுக்கு அடியில் தடவக்கூடாது. பதினைந்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடவும்.

இரண்டு ஸ்பூன்கள் ஓமவல்லி இலைச்சாறுடன், ஒரு ஸ்பூன் சிவப்பு சந்தனத்தை கலந்து பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் பருக்கள் தொல்லை நீங்கும்.

சோற்றுக் கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மையுடையது. அவற்றின் நடுவில் இருக்கும் பசையை எடுத்து, அதில் சம அளவு நீரைக் கலந்து முகத்தில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைப்பதை பார்க்கலாம்.

ஒரு ஸ்பூன் அருகம்புல் பொடியும், குப்பமேனி இலைப் பொடியும் குளிர்ந்த நீரில் கலந்து பருக்களில் போடலாம். இது பருக்களின் வடு மறைய உதவுகிறது.

சந்தனக் கட்டையை பன்னீர் விட்டு இழைத்து முகத்தில் தடவி வந்தால், பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் நாளடைவில் மறையும்.