யார் இந்த சின்மயி? ஏற்கனவே அவர் ஏற்படுத்திய சர்ச்சைகள் இவைதான்!!

2118

சின்மயி

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியுள்ள சின்மயியின் திரையுலக வாழ்க்கையே அவரின் பாடல் மூலம் தான் தொடங்கியது. கன்னத்தில் முத்தமிட்டால் என்ற மணிரத்னம் இயக்கிய திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே பாடல் மூலம் தான் திரையுலகுக்கு சின்மயி அறிமுகமானார். இந்த பாடலை எழுதியதற்காக கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய விருது கிடைத்தது.

முதல் பாடலே சின்மயிக்கு பெரும் புகழை தேடி தந்தது. பின்னர் தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களை அவர் பாடினார். ஏ.ஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜா, ஹாரீஸ் ஜெயராஜ் போன்ற முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் சின்மயி குரல் ஒலித்தது.

சின்மயி 10 வயது வரை மும்பையில் வசித்தாலும் அதன் பின்னர் சென்னையில் குடியேறினார். அங்கு தான் கர்நாடக இசையை அவர் கற்றார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ சைக்காலஜி பட்டப்படிப்பை முடித்த சின்மயி பாட்டு பாடுவதோடு, முன்னணி கதாநாயாகிகளுக்கு டப்பிங்கும் கொடுத்து வருகிறார். கடந்த 2013-ஆம் ஆண்டு நடிகர் ராகுல் ரவீந்திரனை காதலித்து மணந்தார் சின்மயி.

சின்மயி டுவிட்டரில் தீவிரமாக பல ஆண்டுகளாகவே செயல்பட்டு வருகிறார். தனது டுவீட்களால் பலமுறை சர்ச்சையிலும் சிக்கியுள்ளார். கடந்த 2011-ல், மீனவர்கள் மீன்களை கொல்லும் போது, கப்பல் படை மீனவர்களை கொல்வது தவறா என சின்மயி பதிவிட்டார். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து இட ஒதுக்கீடு சம்மந்தமாக சின்மயி பதிவிட்ட டுவீட்டில், தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என யாரும் கிடையாது.

அரசியல்வாதிகள் தங்களுக்கு கீழே உள்ளவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் என காட்டி சலுகை பெற்று தருகின்றனர் என பதிவிட்டது பலத்தை சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு எதிர்வினையாக சின்மயியை டுவிட்டரில் விமர்சித்தவர்கள் மீது அவர் பொலிஸ் புகார் அளித்தார். இதனையடுத்து பொலிசார் சிலரை கைதும் செய்தனர்.

அதன்பின்னர் சின்மயி பெரிய சர்ச்சையில் சிக்கவில்லை என்றாலும், அவ்வபோது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இதன் உச்சமாக வைரமுத்து மீது அவர் தற்போது குற்றஞ்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.