16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த நபர்: வெளியான பகீர் பின்னணி!

710

இந்தியாவில் மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த வழக்கில் வாலிபர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் சீனிவாசலு (26). இவர் கட்டாரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு ஈரோட்டை சேர்ந்த தனசேகரன் என்பவரின் மனைவி ரேகாபானு (34) பேஸ்புக் மூலம் அறிமுகமானார்.பின்னர் ரேகாபானு தனக்கு தெரிந்த ஒரு 16 வயது மைனர் பெண்ணை சீனிவாசலுவுடன் பேச வைத்ததோடு, பெண்ணை திருமணம் செய்து அழைத்து செல்லும்படி சீனிவாசலுவிடம் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து கட்டாரிலிருந்து ஈரோட்டுக்கு கடந்த 28-ஆம் திகதி வந்த சீனிவாசலு மைனர் பெண்ணை கடத்திக்கொண்டு வேலூரில் திருமணம் செய்தார்.இதைத்தொடர்ந்து அவரை சித்தூருக்கு அழைத்து சென்று வாழ்ந்து வந்துள்ளார்.

இதற்கிடையே மைனர் பெண்ணின் தாய் தனது மகளை காணவில்லை என்று பொலிசில் புகார் கொடுத்தார்.அதன்பேரில் பொலிசார் விசாரணை நடத்தியதில் மேற்கண்ட தகவல் தெரியவந்தது.

இதை தொடர்ந்து சித்தூருக்கு சென்ற பொலிசார் மைனர் பெண்ணை மீட்டதுடன், சீனிவாசலுவையும் கைது செய்து ஈரோட்டிற்கு கொண்டு வந்தனர்.

மேலும் இதற்கு உடந்தையாக இருந்த ரேகாபானுவும் கைது செய்யப்பட்டுள்ளார்.