பல ஆண்களுடன் தொடர்பு : வெளிநாட்டில் இருந்து வந்த கணவரை கொன்ற மனைவி : திடுக்கிடும் தகவல்கள்!!

1000

திடுக்கிடும் தகவல்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுதா என்ற பெண் காதலனுக்காக கணவரை கொலை செய்துள்ளது சம்பவம் 11 ஆண்டுகளுக்கு பின்னர் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சுதா என்ற பெண் ஏராளமான ஆண்களுடன் பழகி வந்ததை அவரது சகோதரர் ரவி கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அடியாட்கள் மூலம் சகோதரரை கொலை செய்ய சுதா முயன்றுள்ளார். ஆன்லின்சிபு என்பவரின் தலைமையில் ஒரு கும்பல் சுதாவின் சகோதரர் ரவியை கடத்தி கொலை செய்ய முயன்றது. அந்த கும்பலிடமிருந்து தப்பி வந்த ரவி, தக்கலை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

புகாரில் தனது தங்கை தவறான வழியில் செல்வதை தட்டிக்கேட்டதற்காக தன்னை தனது சகோதரியே ஆன்லின்சிபுவின் கும்பல் மூலம் கொலை செய்ய முயன்றதாகவும் ஆன்லின்சிபுவுடன் தனது தங்கைக்கு பழக்கம் ஏற்பட்ட பின்னர் தான் அவரது கணவர் ராஜசேகரை காணவில்லை என்றும் புகாரில் தெரிவித்திருந்தார்.

ரவி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2002 ஆம் ஆண்டு ராஜசேகர் – சுதா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

ராஜசேகர் வெளிநாட்டில் கட்டிட வேலை பார்த்து வந்தார். கடந்த 2007-ம் ஆண்டு ஊருக்கு வந்திருந்த அவர், திடீரென மாயமானார். இது குறித்து சுதாவின் சகோதரர் ரவி, பொலிசில் புகார் செய்தார்.

இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்திவந்தபோதும், கடந்த 11 ஆண்டுகளாகியும் இந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் ராஜசேகரை அவரது மனைவி சுதா மற்றும் அவரது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட ராஜசேகரின் உடலை வீட்டின் பின்புறம் உள்ள செப்டிக்டேங்க்கில் வீசியதும் கண்டுபிடிக்கப்பட்டது. பொலிசார் செப்டிக்டேங்க்கில் கிடந்த எலும்புக்கூட்டை கைப்பற்றினர்.

தொடந்து விசாரணை நடத்திய போது, இது தனது கணவரின் எலும்பு கூடு இல்லை எனவும் அவர் வெளிநாட்டில் தான் இருக்கிறார் என்றும் சுதா மறுப்பு தெரிவித்தார்.

அந்த எலும்புக்கூடு தடயவில் மற்றும் பல்வேறு சோதனைக்காக பெங்களூரில் உள்ள தடயவியல் சோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த சோதனை முடிவில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு சுதாவின் கணவர் ராஜசேகருடையது என்பது உறுதியானது.

இதனையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி தக்கலை பொலிசார் முதல் குற்றவாளியாக சுதாவை சேர்த்து 13-ம் தேதி கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், சுதா அளித்துள்ள வாக்குமூலத்தில்,

நானும், ராஜசேகரும் கடந்த 2002-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு பிறகு ராஜசேகரின் நண்பர்கள் எங்கள் வீட்டிற்கு வருவார்கள். இதில் பள்ளியாடியைச் சேர்ந்த ஆன்லின் சிபுவும் அடிக்கடி வந்து சென்றார். அவருக்கும் எனக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

நாங்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம். ஆன்லின் சிபுவுடன் நான், நெருக்கமாக இருந்ததை எனது கணவர் நேரில் பார்த்து கண்டித்தார். இதனால் அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தோம்.

கடந்த 9.2.2007-ம் ஆண்டு மதுவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தோம். பின்னர் அரிவாளால் வெட்டியதுடன், தலையணையால் அமுக்கி கொன்றோம். வீட்டின் செப்டிக் டேங்க்கில் ராஜசேகர் உடலை வீசினோம். பின்னர் ஒன்றும் தெரியாதது போல் இருந்தோம். ராஜசேகரை சிலர் தேடினார்கள். அப்போது அவர் வெளிநாடு சென்று விட்டதாக கூறி நாடகமாடினேன் என கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட சுதாவை பொலிசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர், தக்கலை ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த கொலை வழக்கில் சுதாவின் கள்ளக்காதலன் ஆன்லின் சிபு உள்பட 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆன்லின் சிபு தற்போது கேரளாவில் தலைமறைவாகி உள்ளார். மற்றொருவர் வெளிநாட்டில் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருவரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.