விழுப்புரம்..
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த 17வயது சிறுமி கடந்தாண்டு ப்ளஸ் டூ முடித்துவிட்டு கடந்த 5 மாதங்களாக வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு நேற்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது தாயாரிடம் தெரிவிக்க சிகிச்சைக்காக ஆட்டோ மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுமிக்கு ஆட்டோவிலே பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதனையடுத்து அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தாயும் சேயும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறுமிக்கு 17வயதே ஆகிறது என்பதை அறிந்த மருத்துவர்கள் இதுகுறித்து காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மருத்துவமனைக்கு விரைந்த காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளைஞருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞர் திருமணம் செய்துக்கொள்வதாக கூறி சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளார். இதன்காரணமாக சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட இளைஞரிடம் விசாரணை மேற்கொள்ள காவல்துறையினர் கிராமத்து விரைந்துள்ளனர். போலீசார் இளைஞரின் வீட்டிற்கு சென்ற போது, அவர் தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக இளைஞரின் தாயார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இளைஞர் மீது போக்சோ வழக்குப்பதிந்த போலீசார், இளைஞரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.