தமிழ் புத்தாண்டுப் பலன்கள் 2018 – ரிஷபம்

1953

பொன், பொருள் கொடுத்துப் பொய் சொல்லச் சொன்னாலும் புறங்கூறாத நீங்கள் நீதிக்கும், நியாயத்திற்கும் கட்டுப்பட்டவர்கள். உங்களின் சப்தமாதிபதி செவ்வாய் பகவான் 6ம் வீட்டில் வலுவாக நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எல்லாப் பிரச்னைகளையும், நெருக்கடிகளையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். புதன் உங்களுடைய ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் உங்களுடைய திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

உங்களுடைய ராசியிலேயே இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வேலைச்சுமை அதிகமாகும். ஓய்வெடுக்க முடியாத நிலை உருவாகும். இந்தாண்டு முழுக்க ராகு 3ம் வீட்டிலேயே முகாமிட்டிருப்பதால் தைரியம் கூடும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். இந்தப் புத்தாண்டின் தொடக்கமே ராசிநாதன் சுக்கிரன் 8ல் நிற்பதுடன் சூரியன், சனியுடன் சேர்ந்திருப்பதால் வீண் அலைச்சல்கள், திடீர் பயணங்களெல்லாம் அதிகரிக்கும்.

01.01.2018 முதல் 13.01.2018 வரை சூரியனுடன் சனி சேர்வதால் இக்காலக்கட்டத்தில் தோல்வி மனப்பான்மை, வீண்பழி வந்து போகும். யாருக்காகவும் சாட்சி, கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். சிலர் உங்களை தவறான போக்கிற்கு தூண்டுவார்கள். வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு காசோலை தரவும். வழக்குகளில் அலட்சியம் வேண்டாம்.

10.3.2018 முதல் 02.05.2018 வரை செவ்வாயுடன் சனி சேர்ந்திருப்பதால் இக்காலக்கட்டத்தில் பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் ஏமாற்றங்கள் வந்து போகும். கணவன் மனைவிக்குள் பிரிவு வந்து நீங்கும். வாகனத்தை கவனமாக இயக்குங்கள். விபத்துகள் நிகழக்கூடும். 03.05.2018 முதல் 30.10.2018 வரை செவ்வாயுடன் கேது சேர்ந்திருப்பதால் இக்காலக்கட்டத்தில் பிதுர்வழி சொத்தில் சிக்கல்கள் வரலாம். தந்தையாருடன் கருத்து மோதல்கள் வந்து போகும். செலவுகள் அதிகரிக்கும்.

30.8.2018 முதல் 28.12.2018 வரைக்கும் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 6வது வீட்டில் சென்று மறைவதனால் சிறு சிறு விபத்துகள், வாகனம் பழுதாகுதல், வீடு பராமரிப்பு செலவுகள், தொண்டைப் புகைச்சல் மற்றும் காய்ச்சல் சளி தொந்தரவு வந்து நீங்கும். இந்த 2018ம் ஆண்டு முழுக்கவே சனி 8ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாகத் தொடர்வதால் பொய்யான விளம்பரத்தை கண்டு ஏமாறாதீர்கள்.

ரிசர்வு வங்கியின் அனுமதிப் பெறாத ஃபைனான்ஸ் கம்பெனிகளில் முதலீடு செய்ய வேண்டாம். வட்டிக்கு ஆசைப்பட்டு இருப்பதை இழந்துவிடாதீர்கள். புத்தாண்டின் தொடக்கம் முதல் 02.10.2018 வரை உங்களின் அஷ்டமலாபாதிபதியான குரு 6ம் வீட்டில் மறைந்து சகட குருவாக அமர்ந்திருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முடிப்பதா என்ற டென்ஷன் இருந்து கொண்டேயிருக்கும்.

ஹார்மோன் பிரச்னை, தைராய்டு, யூரினரி இன்ஃபெக்ஷன், தோலில் நமைச்சல் வந்து போகும். ஆனால் 14.02.2018 முதல் 10.04.2018 வரை விசாகம் நட்சத்திரம் 4ம் பாதத்தில் அதிசார வக்ரத்திலும் மற்றும் 3.10.2018 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்கு 7ம் வீட்டிலும் அமர்ந்து ராசியைப் பார்க்கயிருப்பதால் உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

வியாபாரிகளே! ஆழம் தெரியாமல் காலைவிடாதீர்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். வேலையாட்களால் நிம்மதி குறையும். அதிக வேலையிருக்கும் நாட்களில் பணியாட்கள் விடுப்பில் செல்வார்கள். பல நேரங்களில் நீங்களே முதலாளி, நீங்களே தொழிலாளி என்ற வகையில் வேலைப் பார்க்க வேண்டி வரும்.

யாருக்கும் கடன் தர வேண்டாம். அனுபவமில்லாத தொழிலில் பணத்தை கொட்டி நட்டப்படாதீர்கள். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள். புரோக்கரேஜ், மூலிகை, பெட்ரோகெமிக்கல், பிளாஸ்டிக் வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்களால் பிரச்னைகள் வெடிக்கும். எதிர்பார்த்த ஆடர் தாமதமாக வரும்.

உத்யோகஸ்தர்களே! உத்யோக ஸ்தானாதிபதியான சனி 8ல் சென்று மறைந்திருப்பதால் நிலையற்ற போக்கு நிலவும். உங்களை விட வயதில், அனுபவத்தில் குறைவானவர்களிடமெல்லாம் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். அவசரப்பட்டு வேலையை விடுவதோ, புது வேலையில் சேர்வதிலோ கவனம் தேவை.

சக ஊழியர்களைப் பற்றிய குறைப்பாடுகளை மூத்த அதிகாரிகளிடம் எடுத்துச் செல்ல வேண்டாம். அதிகாரிகளுக்குள் நடக்கும் மோதல்களையும், ஈகோ பிரச்னைகளையும் வெளியாட்களிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். சிலர் உங்கள் மீது அவதூறு வழக்குத் தொடர வாய்ப்பிருக்கிறது. நியாயமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, சலுகைகளைக் கூட போராடி பெற வேண்டி வரும். சிலர் கட்டாய விடுப்பில் செல்ல வேண்டியிருக்கும்.

கன்னிப் பெண்களே! இரவில் அதிக நேரம் கண் விழித்திருக்க வேண்டாம். ஃபேஸ் புக், டிவிட்டர், வாட்ஸ்அப்பில் முன்பின் தெரியாத நபர்களுடன் நட்பு பாராட்ட வேண்டாம். சிலர் உங்களுடைய பெயருக்கு கலங்கம் விளைவிக்க முயற்சிப்பார்கள். புதியவர்களை நம்பி பழைய நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

தேமல், கண்ணில் கருவளையம், தூக்கமின்மை வந்துச் செல்லும். பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானது தான் என்பதை நீங்கள் உணர்வீர்கள். வருடத்தின் பிற்பகுதியில் திருமணம் முடியும்.

மாணவ-மாணவிகளே! மந்தம், மறதி அதிகரிக்கும். உயர்கல்வியில் விளையாட்டுத்தனம் வேண்டாம். கீ ஆன்சரை சார்ட்டில் எழுதி வைத்து அவ்வப்போது நினைவுக் கூர்வது நல்லது. சிலர் பெற்றோரை விட்டு பிரிந்து விடுதியில் தங்கிப் படிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அதிகம் செலவு செய்து பள்ளி மாற வேண்டிய கட்டாயத்திற்கு சிலருக்கு ஏற்படக்கூடும்.

அரசியல்வாதிகளே! பொதுக் கூட்டங்களில் ஆவேசமாக பேச வேண்டாம். யதார்த்தமாக இருப்பது நல்லது. கட்சியில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். தொகுதி மக்களை பணிவாக அணுகுங்கள்.

கலைத்துறையினரே! கிடைக்கின்ற வாய்ப்பு சின்னதாக, சாதாரணமானதாக இருந்தாலும் பயன்படுத்துங்கள். கிசுகிசுத் தொல்லைகள் வரும். மூத்த கலைஞர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

விவசாயிகளே! பூச்சித்தொல்லை, எலித் தொல்லையால் மகசூல் பாதிக்கும். செயற்கை உரங்களை குறைவாகப் பயன்படுத்துங்கள். விலை குறைவாக இருக்கிறது என்று நினைத்து தரமற்ற விதைகளை வாங்கி விதைக்க வேண்டாம். அக்கம் பக்கத்து நிலக்காரர்களை அனுசரித்துப்போங்கள். இந்தப் புத்தாண்டு உங்களுக்கு பல சோதனைகளை தந்தாலும், எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டிய அவசியத்தையும், தன் கையே தனக்குதவி என்பதையும் அறிவுறுத்துவதாக அமையும்.

பரிகாரம்:சென்னை சிங்கப்பெருமாள் கோயிலுக்கு அருகேயுள்ள ஆப்பூர் ஸ்ரீநிவாசப் பெருமாளை தரிசியுங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவிற்கு உதவுங்கள்.