அன்று மறுக்கப்பட்ட வாய்ப்பு!! இன்று சாதித்து காட்டிய திருநங்கை!!

792

தமிழகத்தில் பல்வேறு தடைகளைத் தாண்டி திருநங்கையான ஸ்வப்னா மாநில பதிவுத் துறையின் உதவியாளராக பணியில் சேர உள்ளார்.

மதுரையைச் சேர்ந்த ஸ்வப்னா என்ற திருநங்கை கடந்த 2013-ஆம் ஆண்டு டி.என்.பி.எஸ்,சி தேர்வு எழுத முற்பட்டார். ஆனால் திருநங்கை என்ற காரணத்தினால் அவரால் தேர்வு எழுத முடியாமல் போனது.

இதனால் ஸ்வப்னா அன்று திருநங்கைகளுக்காக சட்டப் போராட்டம் நடத்தினார். சென்னையில் போராட்டத்தை துவங்கிய இவர் மதுரை கிளையில் இதற்காக வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை இரண்டு வழக்கறிஞர்கள் கட்டணம் இல்லாமல் வாதாடி உதவி செய்தனர்.

மாநில அரசின் 3 உத்தரவுகளுக்கு எதிராக ஸ்வப்னா மேற்கொண்ட சட்டப் போராட்டத்தின் காரணமாக திருநங்கைகளுக்கு பல்வேறு பலன்கள் கிடைத்தன.

பெண்கள் என்ற பிரிவின் கீழ் திருநங்கைகளை தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதன் மூலம் ஸ்வப்னாவின் சட்டப் போராட்டத்துக்கு பலனும் கிடைத்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மற்றும் குரூப் 2ஏ தேர்வை ஸ்வப்னா எழுதியுள்ளார்.அதில் வெற்றியும் பெற்றதால் மாநில பதிவுத் துறையின் உதவியாளராக இம்மாத இறுதியில் சேரவுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், தான் ஒரு திருநங்கை என்று கூறுவதை ஏற்க முடியாது எனவும், தான் பெண்ணாக மதிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் எனது அனைத்துப் போராட்டங்களுக்கும் பெற்றோர்தான் மிகப்பெரிய காரணம். எந்த நிபந்தனையும் இல்லாமல் அன்போடு என்னை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

இந்த வெற்றிக்கு எல்லாம் மிகப்பெரிய பலமாக இருந்தது என்னுடைய கல்வி தான் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பது எனது கனவு நிச்சயம் ஒருநாள் ஐஏஎஸ் ஆவேன் என்று கூறியுள்ளார்.