விபத்துக்குள்ளான விமானம்

இதுவரை மாயமான மலேசிய விமானம் தொடர்பில் உறுதியான எந்த தகவலும் வெளியாகாத நிலையில், விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானம் தொடர்பில் நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்ப உலகம் அசுர வளர்ச்சி அடைந்த பின்னரும், விமானம் விபத்துக்குள்ளாகி 60 மணி நேரத்திற்கும் மேலாகியும் இதுவரை முக்கிய பாகங்கள் எதையும் நிபுணர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

விமானத்தின் பாகங்கள் என கருதப்படும் முக்கியமல்லாத பாகங்கள், பயணிகள் சிலரது சடலங்கள் என மீட்புக்குழுவினரால் மீட்கப்பட்டிருந்தாலும் விமானம் எங்கே என இதுவரை கண்டுபிடிக்க முடியாதது நிபுணர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

விமான விபத்திற்கு பின்னர் கடலுக்கடியில் தேடுவதற்கு பயன்படுத்தப்படும் சோனார் கருவிகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் அனைத்தும் பயன்படுத்தப்படுகிறது என்றபோதும் இதுவரை விமானம் விபத்துக்குள்ளான பகுதி எதுவென கண்டுபிடிக்க முடியவில்லை.

மட்டுமின்றி விபத்துக்கு உள்ளானபோது விமானத்தில் பதிவான தகவல்களை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தினால் மட்டுமே, வெளியாகி வெறும் 2 மாதமேயான மேக்ஸ் 8 ரக போயிங் விமானம் விபத்துக்குள்ளானதன் காரணம் தெரிந்துகொள்ள முடியும்.

அது தெரிந்துகொண்டால் மட்டுமே எஞ்சிய விமானங்களின் தொழில்நுட்பங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்தி பெரும் விபத்துக்களை தவிர்க்க முடியும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி தொடர்பில் தீவிரமாக தேடி வருகின்றனர். கருப்பு பெட்டி இருக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளதாகவும் உடனடியாக மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி திங்களன்று காலை 6.30 மணியளவில் குறித்த விமானம் ரடாரில் இருந்து மாயமானது. அதன் பின்னர் மாயமான விமானத்தின் பாகங்கள் கடலில் 30 மீற்றர் ஆழத்தில் நிபுணர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனிடையே லயன் ஏர் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் எஞ்சிய 11 போயிங் விமானங்களையும் நிபுணர்கள் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

விமானங்களை தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்தி உறுதிப்படுத்திய பின்னரே பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என இந்தோனேசிய அரசு லயன் ஏர் நிர்வாகத்திடம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.