2018 ஆம் ஆண்டில் அதிகம் உயிர் பலி வாங்கிய விமான விபத்துகள்!!

573

விமான விபத்துகள்

2018 ஆம் ஆண்டிற்கான விமான விபத்தில் பலியானோர்களின் பட்டியலை விமான பாதுகாப்பு இணையதளம் வெளியிட்டுள்ளது. அதன்படி 556 பேர் கடந்த ஆண்டு மட்டும் விமான விபத்தில் பலியாகி உள்ளனர். இது 2017ஆம் ஆண்டைவிட மிகவும் அதிகம் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 2017ஆம் ஆண்டு 44 பேர் மட்டுமே விமான விபத்தில் பலியாகி உள்ளனர்.

2018 ஆண்டில் நடைபெற்ற விமான விபத்தில் லையன் ஏர்-க்கு சொந்தமான போயிங் 737 விமானம் ஜகார்தாவிலிருந்து இந்தோனேஷியாவிற்கு புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர். இந்த விபத்து கடந்த ஆண்டின் மோசமான விமான விபத்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கியூபாவில் நடந்த விமான விபத்து ஒன்றில், 112 பேர் உயிரிழந்தனர். பிப்ரவரி மாதத்தில் ஈரான் நாட்டின் ஜாக்ரோஸ் மலையில் மோதிய விமானம் நொறுங்கியதில் 66பேர் பலியாகினர்.

இதேபோல், மார்ச் மாதத்தில் நேப்பாள் நாட்டின் காத்மண்டு விமான நிலையத்தில் தரையிறங்கும் வேளையில் ஏற்பட்ட விபத்தில் 51 பேர் பலியாகினர். இப்படி மொத்தம் 15 விமான விபத்துக்கள் நடந்துள்ளதாக விமான பாதுகாப்பு இணையதளம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

விமான விபத்து வீதம் 10 ஆண்டுகளுக்கும் முன் இருந்தது போலவே இருந்திருந்தால், கடந்த ஆண்டு 39 மோசமான விபத்துகள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று விமான பாதுகாப்பு இணையதளத்தின் முதன்மை செயல் அதிகாரியான CEO Harro Ranter தெரிவித்தார்.

அதேபோல் 2000ஆம் ஆண்டின் விபத்து வீதத்தின்படி, 64 மோசமான விபத்துகள் நிகழ்ந்திருக்க வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக விமான பாதுகாப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதையே இது காட்டுகிறது என்றார் அவர்.

கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட விபத்துகள்தான் பெரும் பிரச்சினையாக இருந்ததாகவும், கடந்த ஐந்தாண்டுகளில் நிகழ்ந்த விபத்துகளில், அத்தகைய விபத்துகள் 10 நிகழ்ந்துள்ளன என்றும் விமான பாதுகாப்பு இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த, கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட விபத்துகள் என்பவை, இயந்திரக் கோளாறுகள், மனித தவறுகள், சுற்றுப்புற இடையூறுகள் போன்றவற்றால் நிகழ்ந்திருக்கலாம். இத்தகைய விபத்துகளில் பெரும்பாலானவை, விபத்தில் சிக்கிய யாரையும் காப்பாற்ற முடியாத அளவு மோசமாக இருந்தன என்கிறது விமான பாதுகாப்பு இணையதளம்.