வீட்டை காலி செய்யாத பெற்றோர்.. பழிவாங்க 9 வயது சிறுமி மீது மின்சாரத்தை பாய்ச்சிய கொடூரம்!!

368

தமிழகத்தில் வீட்டை காலி செய்யாததால், வாடகை வீட்டில் வசித்த தம்பதியரின் 9 வயது மகள் மீது உரிமையாளர் மின்சாரத்தை பாய்ச்சி சித்ரவதை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பேச்சியம்மன் படித்துறைப் பகுதியில் உள்ள மணிவண்ணன் என்பவருக்குச் சொந்தமான வாடகை வீட்டில், கணேஷ்குமார்-ராஜலட்சுமி என்ற தம்பதி வசித்து வந்தனர்.

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களில் மூத்த மகள் ஹரிணி(9) 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டின் உரிமையாளர் கணேஷ்குமாரிடம் வீட்டை காலி செய்யுமாறு வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை வீட்டின் மாடியில் விளையாடிக்கொண்டிருந்த ஹரிணி மின்சாரம் தாக்கி விழுந்துள்ளார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹரிணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டபோது, ஹரிணியின் உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததைப் பார்த்து அவரின் பெற்றோர் சந்தேகமடைந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து பேச முடியாமல் இருந்த ஹரிணியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மின்சாரம் தாக்கிய சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

வீட்டின் உரிமையாளரின் மகன் சந்தோஷ் தான் வேண்டுமென்றே தன் மீது மின்சாரத்தைப் பாய்ச்சி, அடித்து சித்ரவதை செய்ததாக ஹரிணி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஹரிணியின் தந்தை கணேஷ்குமார், திலகர் திடல் காவல்நிலையத்தில் சந்தோஷ் மீது புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து, பொலிசார் சந்தோஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஹரிணியின் தந்தை கணேஷ்குமார் கூறுகையில், ‘நாங்கள் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் எங்களிடம் வீட்டை காலி செய்யுமாறு கூறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.

வேறு வீடு மாற முயன்றும் முடியவில்லை. விரைவாக வீட்டை காலி செய்யாத கோபத்தில் வீட்டின் உரிமையாளரின் மகன் சந்தோஷ், என் மகள் ஹரிணி மீது மின்சாரத்தைப் பாய்ச்சியுள்ளார்’ என தெரிவித்துள்ளார்.