100 நாட்கள் ஒரு தாயின் பாசப் போராட்டம் வென்றது : சிறுமி ஹரிணி மீட்பு!!

180

சிறுமி ஹரிணி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காணாமல் போன சிறுமி ஹரிணி 100 நாட்கள் கழித்து மீட்கப்பட்டுள்ளார். வெங்கடேசன்- காளியம்மாள் என்ற நாடோடி இனத் தம்பதியினர் காஞ்சிபுரம் மானாமதியில் தங்களது குழந்தையை தொலைத்துள்ளனர்.

குழந்தை கிடைக்கும் வரை இந்த இடத்தைவிட்டு நகர மாட்டோம் என்றபடி அங்கேயே இருந்தனர். இதற்கிடையில் இரண்டாவது குழந்தையை சுமந்திருந்த தாய் காளியம்மாள், தனது மகள் காணாமல்போன நாள் முதல் சரியாக சாப்பிடாமல் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.

சிறுமியை தேடும் பணியை தொடர்ந்து பொலிசார் செய்துவந்தனர். நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா, வெங்கடேசனை அழைத்துப் பேசி தைரியப்படுத்தியிருக்கிறார். தான் நடத்திவரும் குழந்தைகள் அமைப்புமூலம் இரண்டு மாதங்களாக ஹரிணியைத் தேடிவருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் , திருப்போரூரில் சிறுமி ஹரிணி இன்று மீட்கப்பட்டுள்ளார், ஹரிணியை பொலிசார் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஹரிணியைக் கண்டதும் வெங்கடேசனும் காளியம்மாளும் அழத்தொடங்கிவிட்டார்கள். பேசுவதற்கு அவர்களிடம் வார்த்தைகள் இல்லை. காவல்துறைக்குக் கண்ணீரால் நன்றி தெரிவித்த காளியம்மாள், குழந்தை ஹரிணியைத் தழுவி முத்தமிட்டுக் கொஞ்சினர்.