ஒரு குழந்தைக்கு கொடுக்கப்பட்ட 6 மாநில பெண்களின் தாய்ப்பால் : ஆச்சரிய சம்பவம்!!

619

இந்தியாவில் மகேந்திரா என்ற குழந்தைக்கு ஆறு மாநிலத்தை சேர்ந்த பெண்களிடம் தாய்ப்பால் தானம் கேட்கப்பட்டு கிடைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையைச் சேர்ந்த ராதிகா பிரசவத்துக்காக, விசாகப்பட்டினத்தில் இருக்கும் தன் தாய் வீட்டுக்குச் சென்ற நிலையில் ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு மகேந்திரா என்று பெயர் சூட்டப்பட்ட நிலையில், அவனால் தொடர்ந்து தாய்ப்பால் குடிக்க முடியவில்லை. பல்வேறு மருத்துவர்களிடம் குழந்தையை காட்டியும் பிரச்சனை தீரவில்லை.

ஒரு வழியாகக் கோவையில் உள்ள ஓர் மருத்துவரிடம் சிகிச்சை பெற முடிவு செய்து, கோவை கிளம்பினர். விசாகப்பட்டினம் டு கோவை ரயில் பயணம் சுமார் 20 மணி நேரத்துக்கு நீடிக்கும்.

மகேந்திராவுக்காக விசாகப்பட்டினத்தில் உள்ள தாய்மார்களிடம், பால் தானம் கேட்கப்படுகிறது. தாய்ப்பால் தானம், ஃபார்முலா மில்க் என்று பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டன. ஆனால், ரயில் கிளம்பும் வரை அதில் எந்த முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை.

இந்நிலையில், தங்களது விடாமுயற்சி மூலம் குழந்தையின் பசியாற்றி, அவனைக் கோவைக்குப் பத்திரமாக அழைத்துவந்துள்ளார் குழந்தையின் தாய் ராதிகா.

இது குறித்து ராதிகாவின் பாலூட்டல் ஆலோசகர் ஸ்வாதி கூறுகையில், ராதிகாவுக்கு பால் சுரப்பு அதிகம் இருந்தும், குழந்தையால் தொடர்ந்து பால் குடிக்க முடியவில்லை. நான் சோதித்துப் பார்க்கையில் அந்தத் தாயிடம் எந்தக் குறையும் இல்லை. குழந்தைக்குதான் பிரச்னை இருப்பதாகத் தெரிந்தது. சரி, கோவை வாங்க பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட்டேன்.

20 மணி நேரப் பயணத்தில் குழந்தையை எப்படிச் சமாளிப்பது என்ற கேள்வி எழுந்தது விசாகப்பட்டினம் பகுதியில் தாய்ப்பால் தானம் பெற முயற்சி செய்தோம். அது கிடைக்காததால், மாற்று ஏற்பாடுகளை முயன்று பார்க்கலாம் என்று முடிவுக்கு வந்தோம்.

மகேந்திராவுக்கு தாய்ப்பால் கொடுக்க முடிந்தளவு ராதிகா முயன்றும் முடியவில்லை.

கோவையில் இருக்கும் என்னுடைய மற்றொரு நண்பர் மூலம் மீண்டும் முயற்சி செய்தோம். ஒரு வழியாக, ஃபார்முலா மில்க் விநியோகித்தர் மூலம் விஜயவாடா ரயில் நிலையத்தில் அவர்களிடம் ஃபார்முலா மில்கை சேர்த்துவிட்டோம்.

அது கொடுத்தவுடனேயே, குழந்தை சற்று பசியாறித் தூங்கிவிட்டான். ஆனால், ஃபார்முலா மற்றும் மாட்டுப் பால் கொடுப்பதில் ராதிகாவுக்கும் பெரிதாக உடன்பாடில்லை.

இதனால், அந்தப் பெண்ணும் விடா முயற்சி செய்துகொண்டிருந்தார். அதில், அவர் வெற்றியும் பெற்றார். இதன் மூலம், குழந்தையும் அழுகவில்லை. அவர்கள் நிம்மதியாகக் கோவை வந்துவிட்டனர். குழந்தைக்குத் சிகிச்சையும் அளித்துவிட்டோம் என கூறினார்.

ராதிகா கூறுகையில், எனக்கு நார்மல் டெலிவரிதான் ஆனது. இவன் சரியாகப் பால் குடிக்கவில்லை. சரி, போகப்போக பழகிவிடுவான் என்று நினைத்தோம். ஆனால், நாளாக நாளாக, அவனது உடல் எடை குறைந்துகொண்டே இருந்தது.

நாங்கள் மிகவும் பயந்துவிட்டோம். இதையடுத்து கோவைக்கு கிளம்பினோம் ஆனால், தாய்ப்பாலோ, நாங்கள் கேட்ட ஃபார்முலாவோ எங்குமே கிடைக்கவில்லை. ஸ்வாதி மேடத்தின் முயற்சியால், விஜயவாடாவில் ஃபார்முலா கிடைத்தது. ஆனால், அதைத் தொடர்ந்து கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

எனவே, ரயிலில் உள்ள வேறு மாநிலத்தவர்களிடம் தாய்ப்பால் தானம் கேட்டேன். அவர்களும், என் நிலைமையைப் புரிந்துகொண்டு கொடுத்தனர். பெங்காளி, ஆந்திரா, கேரளானு ஆறு மாநிலங்களைச் சேர்ந்த தாய்மார்கள் பால் கொடுத்தனர். அவர்களுக்கு எல்லாம் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

என் மகன் அதிர்ஷ்டசாலி. ஒருவழியாக கோவை வந்துவிட்டோம். சிகிச்சையும் தொடங்கிவிட்டோம். மகேந்திரா பால் குடிக்க முயற்சி செய்து வருகிறான் என கூறியுள்ளார்.