எஜமானியை கடிக்க வந்த குரங்கிடம் சண்டை போட்டு காப்பாற்றிய நாய் : இறுதியில் காத்திருந்த சோகம்!!

970

தமிழகத்தில் எஜமானியை கடிக்க வந்து குரங்குடன் சண்டை போட்டு காப்பாற்றிய நாய் பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் தாழக்குடி பகுதியில் ஆண் குரங்கு ஒன்று சுற்றுத் திரிந்து வருகிறது. இந்த குரங்கு அவ்வழியே யார் சென்றாலும், அவர்களை கடிக்க வருவது, வீட்டில் உள்ள உணவுகளை பறித்து உண்பதை வழக்கமாக வைத்து வருகிறது. இதனால் அந்த குரங்கின் தொல்லையால் அப்பகுதி மக்கள் மிகுந்த எரிச்சலில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் இருக்கும் மணி என்பவரின் மனைவி பத்மா அவரது வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் இருந்த அந்த குரங்கு, திடீரென்று பத்மாவை கடிக்க முயன்றது.

உடனே இதைக் கண்ட அவர்கள் வளர்க்கும் நாய், குரங்கிடமிருந்து எஜமானியை காப்பாற்றுவதற்காக சண்டை போட்டுள்ளது. அப்போது குரங்கு ஆத்திரத்தில், நாயின் மார்புப் பகுதியை பயங்கரமாக கடித்து குதறி, அதன் பின் வீட்டின் உள்ளே சென்று பாத்திரங்களை தூக்கி வீசியுள்ளது.

இருப்பினும் அந்த காயத்துடன் நாய் மீண்டும் சென்று குரங்கிடம் சண்டை போட, சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சண்டையால் அதிர்ச்சியடைந்த பத்மா, அதன் பின் அலறியுள்ளார்.

இந்த சத்தத்தைக் கேட்ட் அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக விரைந்து வர, குரங்கு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது. ஆனால் படுகாயமடைந்த நாய் அந்த இடத்திலே பரிதாபமாக இறந்தது.

இந்த சம்பவத்தையடுத்து அங்கிருக்கும் மக்கள் அந்த குரங்கை பிடித்து காட்டிற்குள் விட வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.