3 வயது மகளை கொடூரமாக கொலை செய்த இந்திய தாயார் வழக்கில் அதிரடி திருப்பம்!!

1091

வழக்கில் அதிரடி திருப்பம்

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் பெற்றோரால் 3 வயது குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஷெரின் மேத்யூஸ் என்ற 3 வயது குழந்தை கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த வழக்கில் குழந்தையின் தாயாரான சினி மேத்யூஸ் என்பவருக்கு 15 மாத சிறை தண்டனை விதித்து மாகாண நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த கொலை வழக்கில் சினி மேத்யூஸ் தொடர்பில் போதிய ஆதாரங்கள் ஏதும் இல்லை என நிரூபணமான நிலையில் அவரை சிறையில் இருந்து நீதிமன்றம் விடுவித்துள்ளது.

வெள்ளியன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சினி மேத்யூஸ் தாம் குற்றமற்றவர் என்பதை நீதிமன்றம் இறுதியில் ஒப்புக்கொண்டது எனவும், தமது சொந்த மகளை சந்திக்க ஆவலாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். ஆனால் ஷெரின் மேத்யூஸ் கொலை வழக்கு தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு சிறுமி ஷெரின் கொலை வழக்கில் சினி மேத்யூஸ் மீது பொலிசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். கணவர் வெஸ்லி மேத்யூஸ் உடன் சேர்ந்து தங்களது வளர்ப்பு மகளான ஷெரினை உதாசீனம் செய்தார்களா என விசாரித்துள்ளனர். சினியின் கணவர் வெஸ்லி தற்போதும் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்தியாவின் கேரளா மாநிலத்தை சேர்ந்த வெஸ்லி மற்றும் சினி மேத்யூஸ் தம்பதிகள் கடந்த 2016 ஆம் ஆண்டு அநாதை இல்லம் ஒன்றில் இருந்து குழந்தை ஷெரினை தத்தெடுத்துள்ளனர்.

2017 அக்டோபர் மாதம் ஷெரின் மாயமானதாக வெஸ்லி மேத்யூஸ் பொலிசாருக்கு தகவல் அளிக்கவும், அதன் பின்னர் நடந்த தீவிர விசாரணையில் வெஸ்லியே தமது வளர்ப்பு மகளை கொலை செய்துள்ளது வெளிச்சத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.