அறுவை சிகிச்சையின்போது பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை : சென்னையில் நடந்த சம்பவம்!!

929

பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

சென்னையில் அறுவை சிகிச்சை அரங்கில், மயக்க நிலையில் இருந்த பெண்ணிடம் உதவி மயக்க மருந்தாளர் தவறாக நடந்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் பெங்களூருவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், மூட்டுவலியால் அவதிப்பட்ட அவர் அறுவை சிகிச்சைக்காக சென்னைக்கு வந்துள்ளார்.

சென்னை பெருங்குடியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், குறித்த பெண் கடந்த 4ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 5ஆம் திகதி அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது அரை மயக்கத்தில் இருந்த அவரிடம், உதவி மயக்க மருந்தாளர் டில்லிபாபு என்பவர் தவறாக நடந்துள்ளார்.

செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருந்ததால், தனக்கு நேர்ந்த கொடுமையை அப்பெண்ணால் தடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மயக்கம் தெளிந்த பின் குறித்த பெண் மருத்துவமனை நிர்வாகத்திடம் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார்.

ஆனால், மருத்துவமனை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பெண் ஒன்லைன் மூலம் காவல் ஆணையருக்கு புகார் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து விசாரிக்க வந்த பொலிசாரிடம், குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான குறித்த பெண், துரைப்பாக்கம் காவல்துறையினரிடம் மீண்டும் புகார் அளித்ததைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த பொலிசார் அப்பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை ஆய்வு செய்தனர்.

அப்போது தான் குறித்த பெண்ணிடம், உதவி மயக்க மருந்தாளுனர் டில்லிபாபு தவறாக நடந்துள்ளது உறுதியானது. அதனைத் தொடர்ந்து டில்லிபாபுவை கைது செய்த பொலிசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் குறித்த பெண், தன்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக்கூறி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கிய மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.