உடல் எடையை குறைக்கும் Snake Diet: பாதுகாப்பானதா?

813

ஆரோக்கியத்திற்காக உடல் எடைக் குறைப்பில் ஈடுபடுபவர்களை விட அழகிற்காக உடல் எடைக் குறைப்பில் ஈடுபடுபவர்கள்தான் அதிகம்.இதற்காகவே புதிது புதிதான பெயரில் பல டயட் சிஸ்டம்கள் அறிமுகமாகி உள்ளன. ஒரே விதமான உணவு முறையைப் பின்பற்றி உடல் எடையைக் குறைப்பதுதான் உடலுக்கு நலம் பயக்கும்.

டயட் எடுப்பதற்கு முன் அது சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின் பேரில் டயட் எடுத்துக் கொள்வது அவசியம்.தற்போது புதிதாக Snake Diet என்கிற ஒன்று பிரபலமாகி உள்ளது. இந்த முறையைப் பின்பற்றுவதன் மூலம் நாமும் பாம்பை போல ஒல்லியாகலாம் என்பதால் இந்தப் பேரை வைத்தார்களோ என்னவோ!இந்த டயட் குறித்து இப்போது பார்க்கலாம். அதன்பின் இதனைப் பின்பற்றலாமா வேண்டாமா என்பது பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

சினேக் டயட்டை அறிமுகப்படுத்தியவர் கோல் ராபின்சன். நாம் சாப்பிடும் உணவு மற்றும் அதன் செரிமான முறைகள் பற்றி சரியான விழிப்புணர்வு யாருக்கும் இருப்பதில்லை, எனவே இந்த சினேக் டயட்டை மூன்றாகப் பிரித்து அதன் மூலம் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை நாம் உணரும்படி வைத்திருப்பதாக கூறுகிறார்.

இந்த டயட்டின் முதல் பகுதி படி முதல் 48 மணிநேரத்திற்கு வெறும் ஆப்பிள் சீடர் வினிகர் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.மேலும் அதோடு சினேக் ஜூசும் அருந்தி வர வேண்டும், சினேக் ஜூஸ் கல்லீரலில் உள்ள நச்சுபொரூட்களை அகற்றுவதாக இவர் கூறுகிறார்.

தயாரிக்கும் முறை:ஒரு டீ ஸ்பூன் உப்பு,ஒரு டீ ஸ்பூன் ஹிமாலயன் உப்பு,
சிறிதளவு மிளகு தூள் மூன்றையும் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வைத்து குடிக்க வேண்டும்.

இந்த டயட்டின் இரண்டாம் பகுதி , ஸ்நேக் டயட்டின் முதல்பகுதியிலேயே நம் உடல் தயாராகி விடும். ஆகவே இனி உணவு எடுத்துக் கொள்ளலாமா கூடாதா என்பதைக் கூட அதுவே முடிவெடுத்துக் கொள்ளும்.இந்த இரண்டாவது பகுதியில் நாள் முழுவதும் உணவு உண்ணாமல் குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு மட்டும் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த ஸ்நேக் டயட்டின் அடிப்படை உணவு உண்ணாமல் இருப்பதுதான் என்று கூறும் ராபின்சன் , இதன் மூலம் மெட்டபாலிசம் குறையாது என்றும் உணவு எடுக்கும் அந்த 20 நிமிடத்தில் தேவையான கொழுப்பும் ஊட்டச்சத்துகளும் உள்ள உணவாக நாம் எடுத்துக் கொண்டாலே போதும் என்றும் கூறுகிறார்.இந்த டயட்டின் மூன்றாம் பகுதி படி நமக்கு பசி ஏற்படும்போதெல்லாம் குறைவான அளவு உண்ண வேண்டும். அவ்வளவுதான்.

ஒரு வாரத்தை மூன்றாக பிரித்து அந்த நாட்களில் மட்டும் இவ்வாறு உண்ண வேண்டும். இதன் மூலம் டைப் 2 நீரிழிவு உள்ளவர்கள் பயன்பெறலாம். கீட்டோ எனும் டயட்டின் முன்னோடிதான் ஸ்நேக் டயட் என்கிறார் ராபின்சன்.

இந்த உணவு முறை பாதுகாப்பானது தானா?இல்லை என்கின்றனர் மருத்துவர்கள். இது ஒரு தவறான கண்ணோட்டம் என்றும் பல மணி நேர பட்டினிக்குப் பின் ஒரே ஒரு உணவு அதுவும் 20 நிமிடங்கள் மட்டும் என்பது உடலில் தீவிர உபாதைகளை ஏற்படுத்தும் எனவும், மனித உடலுக்கு தேவையான சத்துக்கள் இதன் மூலம் கிடைப்பதில்லை எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குறுகிய காலத்தில் செய்யப்படும் எதுவும் நீண்ட காலத்துக்கு நிலைப்பதில்லை என்பது உண்மை. குறுகிய காலத்தில் உடல் எடைக் குறைப்பில் ஈடுபடுவதாக கூறும் டயட்களின் உண்மை நிலை பற்றி மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு அது தங்கள் உடல்நிலைக்கு ஏற்றதா என சரிபார்த்து பின்பற்றவும்.

உடல் அழகிற்காக செய்யப்படும் எடை குறைப்புகளின் போது அது நம் உயிருக்கு ஆபத்தாகாத வகையில் செயல்படுவது அவசியம்.மனம் செம்மையாக இருக்கும்பட்சத்தில் உடல் வடிவங்கள் நம்மை ஒன்றும் செய்யப்போவதில்லை. ஆகவே ஆரோக்கியமான விதத்தில் உங்களை அழகாக்கி கொள்ளுங்கள் !