வைரலாகும் #DeleteFacebook: தகவல்களை திருடியது எப்படி?

810

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும் நிறுவனம் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை திருடி தவறாக பயன்படுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் உலகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்து உலகறியச்செய்தது. இந்த பிரச்சனை, மோசடி எல்லாமே பேஸ்புக் நிறுவனத்திற்கு முன்பே தெரியும் என்று கூறப்படுகிறது.

மார்க் ஜூக்கர்பெர்க் கொடுத்த அனுமதியின் பேரில்தான் இத்தனையும் நடந்து இருக்கிறது என்று சேனல் 4 நிறுவனம் ஆதாரத்துடன் குற்றம்சாட்டியுள்ளது.

இதன் காரணாமாக தற்போது டெலிட் பேஸ்புக் ”#DeleteFacebook” என்று ஹேஷ்டேக் டிவிட்டர் முழுக்க வைரல் ஆகி உள்ளது. இதனால் பேஸ்புக்கின் மீது மக்களுக்கு உள்ள நம்பகத்தன்மை வெகுவாக குறைந்துள்ளது.

தகவல்கள் திருடப்பட்டது எப்படி?
தாங்கள் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து கொள்வதற்காக 2014ம் ஆண்டு சில கேள்விகளை கொண்ட செயலி ஒன்றை பயனர்களுக்கு அனுப்பியது பேஸ்புக்.

இதனை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான அலெக்சாண்டர் கோகன் என்பவர் உருவாக்கினார்.

YOUR DIGITAL LIFE என்று பெயரிடப்பட்ட இந்த செயலியில் பயனர்கள் தங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் குறித்த தகவல்களை அளித்தனர்.

இதை வைத்துக்கொண்டு தகவல்களை அளித்தவர்களும் அவர்களின் நண்பர்களின் தகவல்கள் என சுமார் 5 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டதாக சேனல் 4 நிறுவனம் தெரிவித்துள்ளது.

திருடப்பட்ட தகவல்களைக்கொண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பை ஆதரிக்கும் வகையில் இந்த நிறுவனம் சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளது.

அதாவது உளவியல் ரீதியாக விளம்பரங்கள், வாசகங்கள், இணையப் பக்கங்கள் போன்றவை பயனர்களின் பக்கத்தில் தெரியவைக்கப்பட்டது.

இதன்மூலம் அமெரிக்கா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளின் அரசியலிலும் முறைகேடுகளில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.

விவகாரம் பெரிதானதும் வருத்தம் தெரிவித்துள்ள பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து தான் மிகவும் வருந்துவதாகவும் நேர்மையற்ற செயலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

செயலிகள், பயனர்களின் தகவல்களை பெறுவது மிக கடுமையாக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

இருப்பினும் பேஸ்புக் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் உலகம் முழுதும் அந்நிறுவனத்துக்கு தடை விதித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.