காது வலியால் அவதிப்பட்ட சிறுமி : மருத்துவர்களின் அலட்சியத்தால் ஏற்பட்ட துயரம்!!

332

காது வலியால்..

தமிழகத்தின் சென்னையில் 9 வயது சிறுமிக்கு காதில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைக்குப் பதில் தொண்டையில் சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூரை அடுத்த பட்டரைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரின் மகள் 9 வயதான ராஜஸ்ரீ. குடியிருப்பின் அருகே அமைந்துள்ள தனியார் பாடசாலையில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

ராஜஸ்ரீக்கு காதில் கம்மல் போடும் இடத்தில் கட்டி வந்துள்ளது. இதனை சரி செய்ய அரசு உதவிபெறும் மருத்துவமனையான அம்பத்தூர் ஸ்டெட்போர்டு மருத்துவமனையை அணுகியுள்ளார் செல்வம்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்த ராஜஸ்ரீக்கு, காதில் இருக்கும் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்காக ராஜஸ்ரீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ சோதனைகள் முடிந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஆனால் மருத்துவர்களின் அலட்சியத்தால் காதுக்கு பதிலாக தொண்டையில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அறுவை சிகிச்சை முடிந்து வெளியே வந்த சிறுமியை கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த தகவல் அறிந்த சிறுமியின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு வா க்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் பெற்றோர், உறவினர் மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

வேறு ஒரு சிறுவனுக்கு செய்ய வேண்டிய ட்ரான்சில் கட்டி அறுவை சிகிச்சையை, சிறுமிக்கு செய்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறியுள்ளனர். பெற்றோர் தரப்பு கூறும் போது, சிறுமிக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்து ட்ரான்சில் எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் வருங்காலத்தில் சிறுமிக்கு தொண்டையில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் தங்களுக்கு உரிய நிதி கிடைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பெற்றோருக்கு இழப்பீடு வழங்க மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.