சிறுவன் சுர்ஜித்தை மீட்பது மேலும் தாமதமாகலாம் : வெளியாகும் தகவலால் சோகத்தில் தமிழகம்!!

324

சோகத்தில் தமிழகம்

கடினமான பாறைகளால் இரண்டாவது இயந்திரம் துளையிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மீட்பு நடவடிக்கை மேலும் தாமதமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மீட்பு நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தொய்வால் சிறுவனின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

திருச்சி மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி கடந்த 60 மணி நேரமாக நடைபெற்று வருகிறது.

பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழித் தோண்டப்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதற்காக ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. இந்த இயந்திரத்தை வைத்து குழி தோண்டும் போது பாறைகள் இருந்ததால் அப்பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அதிக திறன் கொண்ட இரண்டாவது இயந்திரம் இராமநாதபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. சரியாக இன்று அதிகாலை 12 மணி முதல் இரண்டாவது இயந்திரம் செயல்பட தொடங்கியது.

இந்நிலையில் நான்கு மணி நேரத்தில் 10 அடி துளையிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. துளையிடும் இடத்தில் கடினமான பாறைகள் இருப்பதால் வேகமாக துளையிட முடியவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் துளையிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே, மீட்பு நடவடிக்கை நீண்ட 60 மணி நேரமாக தொடர்வதால்,

2 வயதேயான சிறுவனின் உடல்நலன் குறித்து மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளதுடன், மருத்துவர்கள் ஆயத்தமாக இருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.