மொய்ப் பணத்தில் புதுமண தம்பதியின் நெகிழ்ச்சி செயல் : குவியும் ஆதரவு!!

399

தம்பதியின் நெகிழ்ச்சி செயல்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் புதுமண தம்பதி ஒன்று திருமண மொய் பணத்தில் வாகன சாரதிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வாங்கி கொடுக்க முன் வந்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 1 ஆம் திகதி முதல் இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாலக்காட்டை அடுத்த சிட்டூர் பகுதியைச் சேர்ந்த புதுமண தம்பதி திருமண மொய் பணத்தில் வாகன சாரதிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வாங்கி கொடுக்க முன் வந்துள்ளனர்.

இப்பகுதியைச் சேர்ந்த தேவதாஸ்-சுருதி தம்பதிக்கு நேற்று திருமணம் நடந்தது. இதில், மணமக்களுக்கு மட்டும் ரூ.25 ஆயிரம் மொய் பணம் பிரிந்தது.

இந்த பணத்தின் மூலம் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிந்து செல்வதை வலியுறுத்த போவதாக தேவதாசும், சுருதியும் தெரிவித்தனர்.

தாலி கட்டியதும் புதுமண தம்பதி இருவரும் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி பாலக்காடு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றனர்.

அங்கிருந்த அதிகாரியிடம் திருமண மொய் பணம் ரூ.25 ஆயிரம் இருப்பதாகவும், இதனை கொண்டு வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வாங்கி கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

அதிகாரி அவர்களிடம், நீங்களே ஹெல்மெட் வாங்கி வாருங்கள். அதனை எங்கள் முன்னிலையில் நீங்கள் இருவரும் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நாளை மறுநாள் பாலக்காடு பகுதியில் புதுமண தம்பதிகளின் ஹெல்மெட் விநியோகம் நடக்க இருக்கிறது.