நூற்றுக்கணக்கான நாய்கள் தற்கொலை செய்துகொள்ளும் விநோத பாலம்! காரணம் என்ன?

551

பர்முடா முக்கோணத்திலிருந்து காணாமல் போன மலேசியா விமானம் வரை விடை தெரியாத பல விநோதங்களையும் மர்மங்களையும் இந்த உலகம் சந்தித்திருக்கிறது. இன்று வரை ஏதேதோ காரணங்கள் சொல்லப்பட்டாலும் உண்மையான காரணங்கள் கண்டறியப்படாத பல சம்பவங்கள் உலகமெங்கும் நிறைய உண்டு. அதில் ஒன்றுதான் நாய்கள் தற்கொலை பாலம்.

ஒரு பாலம். இங்கே நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் தற்கொலை செய்திருக்கின்றன. பல நாய்களுக்கு நடக்க முடியாத அளவுக்கு எலும்புகள் உடைந்துள்ளன.

சில நாய்கள் கோமாவில் இருந்திருக்கின்றன. சில நாய்கள் பயத்தில் ஒன்றும் சாப்பிடாமல் பல நாள்கள் இருந்திருக்கின்றன. எல்லாவற்றுக்கும் காரணம் ஒரு பாலம். பேய் பிசாசு ஆவி அது இது என்று ஆளுக்கு ஒரு கதையும் காரணமும் சொல்கிறார்கள்.

ஸ்காட்லாந்தின் டம்பர்டன் நகரில் மில்டன் கிராமத்துக்கு அருகே அமைந்துள்ளது ஓவர் டவ்ன் பாலம். நாய்கள் கடக்கத் தடை செய்யப்பட்ட உலகின் முதல் பாலம்.

ஓவர் டவ்ன் ஹவுஸ் மற்றும் தோட்டத்தின் உரிமையாளரான ஓவர்வென் 1891-ம் ஆண்டில் தனது வீட்டுக்கும் தோட்டத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு பாலம் கட்ட முடிவெடுத்தார். அதன்படி சிவில் இன்ஜினீயரான H E மில்னர் என்பவரால் இந்தப் பாலம் வடிவமைக்கப்பட்டது. செதுக்கப்பட்ட கற்கள் மூலமாக 1895-ம் ஆண்டு ஜூன் மாதம் கட்டப்பட்டது.

பல ஆண்டுகளாக, 600 நாய்கள் மர்மமாக இந்த 50 – அடி பாலத்தின் மேலிருந்து கீழே குதித்திருக்கின்றன. அதில் 100 நாய்களுக்கும் மேலாக இறந்திருக்கின்றன.

பாலத்திலிருந்து ஏன் நாய்கள் குதித்து தற்கொலைக்கு முயல்கின்றன என்கிற கேள்விக்குப் பல காரணங்களும் பல கதைகளும் சொல்லப்படுகின்றன. ஆராய்ச்சிகள் எல்லாம் தோல்வியில் முடிய, அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள்.

வெஸ்ட் டன்பார்டன்ஷயரில் உள்ள உள்ளூர்வாசிகள் நாய்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணமாகப் பேய் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஓவர்வென் வொய்ட் லேடி என்கிற பேய் இருப்பதாகவும் அதற்கு ஆதாரமாக சில புகைப்படங்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள். ஓவர் டவ்ன் மாளிகையில் எடுக்கப்பட்ட அமானுஷ்ய புகைப்படத்தை மேற்கோள் காட்டி அதில் பேய் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

பால் ஓவன்ஸ் என்கிற ஆராய்ச்சியாளர் தன்னுடைய பரோன் ஆஃப் ரெயின்போ பிரிட்ஜ் என்ற புத்தகத்தில் `ஆவிகள்’ இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் 1994-ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார். அதில் `ஒரு மனிதன் கடவுளுக்கு எதிரான குழந்தை எனச் சொல்லி தன்னுடைய குழந்தையைப் பாலத்தில் இருந்து தூக்கி எரிந்தார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் குழந்தையின் ஆவிதான் இப்படி நாய்களைப் பழிவாங்குகிறது எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் 1994-ம் ஆண்டுக்கு முன்பான தற்கொலைகளை அவர் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை எனக் கூறி அந்தக் காரணமும் ஏற்கப்படவில்லை.

கடைசியாக உண்மையை அறிய ஸ்காட்லாந்தைச் சார்ந்த டாக்டர் டேவிட் சாண்ட்ஸ் என்பவர் “நாய்கள் உண்மையில் வேண்டுமென்றே தற்கொலை செய்யவில்லை, பாலத்துக்கு அடியில் மிங்க் வகையைச் சார்ந்த உயிரினங்கள் இருக்கின்றன. அவற்றின் வாசனை நாய்களைக் கவர்வதால் நாய்கள் பாலத்தில் இருந்து குதிக்கின்றன” என்கிறார்.

ஆனால், அங்கும் ஒரு முட்டுக்கட்டையைப் போட்டது அறிவியல். ஸ்கார்ட்லாந்தின் பல இடங்களிலும் இப்படியான மிங்க் வகை எலிகள் இருக்கின்றன. ஆனால், அங்கெல்லாம் இப்படியான சம்பவங்கள் நிகழவில்லை.

நாய்கள் பாலத்தில் மாளிகையை நோக்கிச் செல்லும் வலதுபுறத்தில், வளைவுகளுக்கு இடையில் குதிக்கின்றன. நாய்கள் குதிக்கும் நாள்களில் வானம் தெளிவாக இருக்கிறது. வெயில் அடிக்கிறது. இரவுகளில் நாய்கள் குதித்ததாகத் தெரியவில்லை என அநேக மர்மமான குறிப்புகளும் இருக்கின்றன. ஆனால், எங்கும் காரணங்கள் இல்லை.

தற்கொலைப் பாலம் குறித்து ஆராய்ச்சி செய்தவர்கள் பலரும் நாயை அழைத்துக்கொண்டு பாலத்தில் நடந்திருக்கிறார்கள். குறிப்பிட்ட இடம் வந்ததும் நாயின் நடவடிக்கையில் மாற்றம் நிகழ்ந்ததாகவும், ஆனால், நாயைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டதாகவும் வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார்கள்.