1400 கிலோ மீற்றர் ஸ்கூட்டரில் கடந்து மகனை அழைத்து வந்த தாய் : நெகிழ்ச்சி சம்பவம்!!

482

ஓர் நெகிழ்ச்சி சம்பவம்..

1400 கிலோமீற்றர் கடந்து தாய் ஒருவர் மகனை ஸ்கூட்டரில் அழைத்து கொண்டு சொந்த ஊர் திரும்பியுள்ளார். இந்தியாவில், கொரோனா தொற்றின் எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்த காலகட்டத்தில், மக்கள் பல்வேறு இடங்களில் இருந்து வெளியேற இயலாமல் அங்காங்கே அவதியுற்று வருகின்றனர். இவ்வாறு மாட்டிக்கொண்ட பலர், நடைபயணமாக சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். ஆனால், ஒரு தாய் மகனுக்காக 1400கிலோ மீட்டர் ஸ்கூட்டரில் கடந்து அவரை அழைத்து வந்துள்ளார்.

இந்தியாவின் தெலுங்கான மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில், போதா நகரைச் சேர்ந்தவர் ரெஜியா பேகம். 48 வயதான இவர், 15வருடங்களுக்கு முன்னரே கணவரை இழந்து, தனது இரு மகன்களுடன் வாழ்ந்து வருகிறார்.

இவரது மூத்த மகன் பொறியில் பட்டதாரி. இரண்டாவது மகன், மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வருகிறார். அரசு பள்ளி தலைமை ஆசிரியரான ரஜியா பேகம் தனது இரு மகன்களையும் நல்ல நிலைக்கு கொண்டு வர முயற்சித்து வருகிறார்.

இதில், ரஜியா பேகத்தின் இரண்டாவது மகனான 19 வயது நிஜாமுதீன், கடந்த 12ஆம் திகதி தனது நண்பருடன் அண்டை மாநிலமான ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள நெல்லூருக்கு சென்றுள்ளார். அங்கு நண்பரின் தந்தை உடல்நிலக்குறைவால் அவதிப்பட்டதால், நிஜாமுதீனால், ஊர் திரும்ப முடியவில்லை. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு போட்டப்பட்டது.

அதன்பின் ஊர் திரும்ப அவர் பலமுறை முயற்சித்தும் நடக்கவில்லை. இதனால், ரஜியா பேகம் தனது மூத்த மகனை அனுப்பி இளய மகனை அழைத்துவர திட்டமிட்டார். ஆனால், பொலிசாரின் கடும் கட்டுப்பாடுகளால் அது நடக்காது என்று அறிந்து. பொலிசாரின் அனுமதி பெற்ற ரஜியா பேகம் பயணம் மேற்கொள்ள துவங்கியுள்ளார்.

பகல், இரவு தொடர்ந்து ஸ்கூட்டரில் பயணித்த அவர்,மறுநாள் மகன் இருந்த நெல்லூரை அடைந்துள்ளார். அங்கிருந்து கொஞ்சமும் தாமதிக்காமல், மகனை அழைத்துக்கொண்டு ஊர் திரும்பியுள்ளார் ரஜியா.

வீடு வந்து சேர்ந்தபின் பிடிஐ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் “ ஒரு பெண்ணாக அதுவும் சின்ன இருசக்கர வாகனத்தில் பயணம் என்பது கடினமானதுதான். ஆனால், என் மகனை எப்படியாவது அழைத்து வந்துவிட வேண்டும் என்ற மன உறுதி, இதைச் செய்யவைத்தது.

வழியில் உணவு கிடைக்காது என்பதால், ரொட்டிகளைத் தயாரித்து கையில் எடுத்துச்சென்றேன். பசிக்கும்போது, வண்டியை நிறுத்தி சாப்பிடுவேன்.

தாமதிக்காமல் பயணத்தைத் தொடர்வேன். இரவில் பயணம் செய்ய அச்சமாகத்தான் இருந்தது. அதுவும், வாகனமோ மக்கள் நடமாட்டமோ இல்லாத காலி சாலையில் பயணம் செய்யும்போது பயம் இருக்கத்தான் செய்தது” என்று தெரிவித்துள்ளார்.