செத்தாலும் தமிழர்களை விடாமல் துரத்தும் அவலம்.. இந்தக் கொடுமையைப் பாருங்கள்!!

888

பிரேத பரிசோதனை முடிந்த ஒருவரின் உடலுக்கு, சலவை தொழிலாளி ஒருவர் சாக்கு தைக்கும் ஊசியால் தையல் போட்டு கொண்டு இருக்கிறார். எங்காவது இதுபோன்ற கூத்து நடக்குமா? நடக்கவே நடக்காது. தமிழ்நாட்டை தவிர வேறெங்கும் இதுபோன்ற அவலத்தை பார்க்கவே முடியாது.

திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள அரசு மருத்துவமனையில்தான் இந்த அதிசய நிகழ்வு. இந்த மருத்துவமனையில் இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12 மருத்துவர்கள் வேறு உள்ளனர். தலைமை மருத்துவர் தேவராஜன் விடுமுறையில் உள்ளதால் டாக்டர் வேல்முருகன் என்பவர் பொறுப்பு தலைமை மருத்துவராக உள்ளாராம்.

மனித உடல் கிள்ளுக்கீரையா? இந்நிலையில், ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் இறந்து போன ஒருவரின் சடலத்தின் அருகில் கைலி கட்டிய ஒருவர் பிரேத பரிசோதனைக்குபின் உடலை ஊசியால் தைப்பது போன்ற காட்சிகளை கண்டு உறைந்துபோயுள்ளனர் தமிழக மக்கள்.

அந்த “கைலி மருத்துவர்” மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் துணிகளை துவைத்து தரும் தொழிலாளியாம். பெயர் வீரமணியாம். உங்கள் வீரத்தையெல்லாம் எதில் எதில் காட்ட வேண்டும் என்ற வகைதொகை இல்லையா? தமிழ்நாடு மக்களின் உடல் என்ன உங்களுக்கெல்லாம் கிள்ளுக்கீரையாகிவிட்டதா?

நாதியற்ற பூமியில் வக்கற்ற மனித உயிர்கள் என்று நினைத்தீர்களா? சாக்குமூட்டை போன்றா தைப்பது பிரேத பரிசோதனை என்றால் என்ன தெரியுமா? அதன் விதிமுறைகள் தெரியுமா? இறந்தவர் உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது மருத்துவர் ஒருவரும், மருந்தாளுனர் மற்றும் துப்புரவு பணியாளர் மட்டுமே உடன் இருக்க வேண்டும் என்பது விதி.

அதற்கென்று அடையாள அட்டை உள்ளது. அதை அணிந்துதான் பணியாற்ற வேண்டும். ஆனால் சம்பந்தமில்லாத இந்த வீரமணிக்கு அங்கு என்ன வேலை? வீரமணிக்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை. கையுறை மட்டும் அணிந்தபடி இறந்தவரின் உடலை சாக்கு மூட்டையைத் தைப்பதுபோல் தைக்கிறார்.

அலறி அடித்து ஓடும் மக்கள் பணி நேரத்தில் நோயாளிகளை கவனிக்காமல் பணியாளர்களும், செவிலியர்களும் அரட்டை வேறு அடித்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் அவர்கள் மதுபோதையில் காணப்படுகின்றனர். அங்கே “லுங்கி வீரமணி” சாக்கு தைக்கும் ஊசியால் குத்தி கிழித்துக் கொண்டிருக்கும் சடலம் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடையதாக இருந்தாலும் இப்படித்தான் அரட்டையும், சிரிப்பும் வருமா இவர்களுக்கு?

இந்த கண்றாவி காட்சியை மருத்துவமனை ஊழியரே வீடியோவாக எடுத்து வெளியிட்டும் உள்ளார். ஏற்கனவே பொதுமருத்துவமனை என்றால் அலறி அடித்து ஓடுகிறோம். அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற லுங்கி வீரமணிகள், இறந்தவரை ஊசியால் குத்தி கிழிக்கப்பட்டு சிதைக்கப்படுவதை பார்த்தால், ஏழை எளிய மக்கள் என்ன செய்வார்கள்? இன்னும் எத்தனை மருத்துவர்களில் இதுபோன்ற வெளியாட்கள் தலைமறைவில் உள்ளனரோ தெரியவில்லை.

வெளிச்சம்போட்டு காட்ட வேண்டுமா? வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தால்தான் எல்லா நடவடிக்கைகளையும் எல்லா துறையினர்களும் எடுப்பார்களா? தங்களுக்கா எதுவுமே தெரியாதா? ஐயோ, மக்கள் கண்களுக்கு இந்த அவலம் போய்விட்டதே என்ற கவலைதான் இருக்கிறதே துறை சம்பந்தப்பட்டவர்களுக்கு இருக்கிறதே தவிர, ஒழுக்கத்துடனும், ஆரோக்கிய முறையிலும் வைத்துக் கொள்ளும் எண்ணம் அரசுதுறை அதிகாரிகளுக்கு உண்டா? ஒவ்வொரு வீடியோவை பார்த்தபிறகுதான் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை என்றால் அரசு நிர்வாகங்கள் எதற்கு? ஒவ்வொன்றையும் சமூகவலைதளம் மூலம் வெளிச்சம் போட்டுக் காண்பித்து கொண்டுதான் இருக்கு வேண்டுமா?

இது போன்ற செயல்களுக்கு எல்லாம்… விசாரணை, துறை ரீதியான நடவடிக்கை, பணி மாற்றம், இடமாற்றம், தற்காலிக பணிநீக்கம்… இதெல்லாம் வேண்டவே வேண்டாம். தமிழக அரசு இதுபோன்ற அவலங்களை முற்றிலுமாக களைய ஏதேனும் செய்தே ஆக வேண்டும். உடனடியாக அரசு மருத்துவமனைமீது ஒரு நம்பகத்தன்மையை உருவாக்க உடனடி முயற்சியும் எடுக்க வேண்டும்.

வெளியிடப்படும் பிரேத பரிசோதனை அறிக்கைகள் அனைத்தும் உண்மைதானா? சடலங்கள் ஒவ்வொன்றும் முறையான மருத்துவர்களை கொண்டுதான் பிரேத பரிசோதனை செய்யப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க அமைப்பு ஒன்றினை அரசு ஏற்படுத்திட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக மனித உயிர்களின் மகத்துவத்தினை முதலில் மருத்துவமனை ஊழியர்களுக்கு கற்று கொடுக்க வழி காண வேண்டும்.