ஆத்மா சாந்தியடைய இதை செய்யுங்கள்: தற்கொலைக்கு முயன்ற இளைஞரின் உருக்கமான வீடியோ

582

சென்னையில் உள்ள வணிக வளாகத்தின் 4-வது மாடியிலிருந்து குதித்த இன்ஜினீயரை காவலாளி ஒருவர் காப்பாற்றியுள்ள நிலையில், இன்ஜினீயரின் 43 நிமிட பேஸ்புக் வீடியோ வெளியாகியுள்ளது.

வடபழனியில் உள்ள திரையரங்கம் அருகில் அடுக்குமாடி வணிகவளாகம் உள்ளது.இதன் நான்காவது மாடியிலிருந்து சிதம்பரத்தை சேர்ந்த சபரிநாதன் (27) என்ற வாலிபர் கீழே குதித்த நிலையில் அங்கிருந்த செக்யூரிட்டிகளின் மேற்பார்வையாளரான தேவசகாயம் என்பவர் கீழே குதித்த சபரிநாதனை தன்னுடைய கைகளால் தாங்கிப்பிடித்தார்.

இதனால் சபரிநாதன் உயிர் பிழைத்த நிலையில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. தற்போது இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

சம்பவம் குறித்து பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வேலை கிடைக்காத விரக்தியில் அவர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.தற்கொலைக்கு முன் சபரிநாதன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் 43 நிமிட வீடியோவை பேசி வெளியிட்டுள்ளார்.

அதில், தொடர்ந்து மாணவர்களை மதிப்பெண் அடிப்படையில் மதிக்காதீர்கள், அவர்களின் திறமைக்கு மரியாதை கொடுங்கள்.நான் இன்ஜினீயரிங் கல்லூரியில் சேரும்போது என்னுடைய கட்ஆப் மார்க் அடிப்படையில் நான் கேட்ட பாடப்பிரிவை தரவில்லை.

ஆனால், அந்தப் பாடப்பிரிவு வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் நன்கொடை கேட்டது, இதுதான் இன்றைய கல்வி நிலை, கல்வித்திட்டத்தை மாற்றுங்கள்.

நீட் தேர்வை எழுத தமிழக மாணவர்கள் வேறு மாநிலத்துக்குச் செல்ல வேண்டியதுள்ளது, தமிழ் மாணவர்களால் வேறு மாநிலங்களில் எப்படித் தேர்வு எழுத முடியும்.

விவசாயிகளின் நலனில் அரசு அக்கறை செலுத்த வேண்டும், மது குடித்தால் கோபம் வரும் என்பதால் தயவு செய்து குடிக்காதீர்கள்.நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்துவிட்டேன், தற்கொலைக்கு முன் என் மனம் விட்டு பேசிவிடுகிறேன், என் ஆன்மா சாந்தியடைய இதையெல்லாம் செய்யுங்கள் என கூறியுள்ளார்.