13 வயதுச் சிறுவன் கொடூரமாக கொலை : பதறவைக்கும் காரணம்!!

805

இந்தியாவில் 13 வயது சிறுவன் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தின் பனஸ்கண்டாவை சேர்ந்தவர் திரிலோக்சந்த் ஷா. இவர் மகன் ஜெய்னம் ஷா (13). கடந்த 2014-ல் ஜெய்ன் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது மர்ம நபர்களால் கடத்தி செல்லப்பட்டான்.

பின்னர் திரிலோக்சந்துக்கு போன் செய்த மர்ம நபர்கள் அவர் உடனடியாக 50 லட்சம் பணத்தை தங்களுக்கு கொடுக்க வேண்டும் எனவும் இல்லையெனில் ஜெய்னமை கொன்று விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.

இது குறித்து திரிலோக்சந்த் பொலிசாருக்கு புகார் அளித்த நிலையில் பொலிசார் மர்ம நபர்களிடமிருந்து வந்த போன் நம்பரை வைத்து விசாரணை நடத்தினார்கள்.

இதை எப்படியோ தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் சிறுவன் ஜெய்னம் ஷாவை கொடூரமாக கொலை செய்து அங்குள்ள கால்வாயில் தூக்கி போட்டனர்.

சம்பவம் நடந்த அடுத்தநாள் பொலிசார் ஜெய்னம் சடலத்தை கைப்பற்றிய நிலையில் இச்செயலில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்தனர்.

அதில் முக்கிய குற்றவாளிகளான மெகுல் பிரஜ்பதி மற்றும் மாலா ரபாரி ஆகிய இருவரும் அளித்த வாக்குமூலத்தில், எங்களுக்கு சூதாட்டம் விளையாடும் பழக்கம் இருந்ததால் அதிகம் பணம் தேவைப்பட்டது.

இதோடு 6 லட்சம் அளவில் எங்களுக்கு கடன் இருந்தது. அதில் ஒன்றரை லட்சம் கடனை ஜெய்னமின் தந்தை திரிலோக்சந்திடமிருந்து வாங்கினோம்.

அவர் பெரிய கோடீஸ்வரர் என்பது எங்களுக்கு தெரியும், அதனால் அவர் மகனை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டோம், அது கொலையில் முடிந்து விட்டது என கூறினர்.

இந்த ஆறு பேர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் மெகுல் மற்றும் ரபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து தற்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கில் தொடர்புடைய மற்ற நால்வருக்கும் தலா ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.