தன்னை காப்பாற்றியவரை 5000 மைல் தூரம் பயணம் செய்து பார்க்க வரும் பென்குயின்..!

206

பிரேசிலின்………..

பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் அன்றையை தினம் கடலில் அலைகளின் வேகம் அதிகமாக இருந்தது. ஏராளமான பென்குயின்கள் நீந்த முடியாமல் திணறின. ஆண் பென்குயின் ஒன்று கடற்பாறையில் சிக்கிக் கொண்டு தவித்தது.

அதனை பார்த்த ஜோ ஃபெரைரா என்ற மீனவர் பென்குயினை பாறை இடுக்கில் இருந்து மீட்டு வீட்டுக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்து உயிர் பிழைக்க வைத்தார். அதற்கு டின்டிம் என்றும் பெயர் சூட்டினார். டின்டிமின் உடல் பகுதியில் இருந்த அழுக்கு படிமங்களை அகற்றி வீட்டில் வைத்தே பராமரித்தார் ஜோ.

கடலில் நீந்தும் அளவுக்கு டின்டிமின் உடல்நிலை முன்னேற்றம் கண்டதும், ஜோ மீண்டும் அதனை கடலில் கொண்டு போய் விட்டார். கடந்த 2011ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடைபெற்றது. டின்டிம் கடலுக்கு திரும்பி சில மாதங்கள் ஆகியிருக்கும்.

ஒரு நாள் ரியோடி ஜெனிரோ அருகில் அந்த மீனவர் வசிக்கும் தீவுக்கு டின்டிம் மீண்டும் வந்தது. வந்ததுடன் நிற்கவில்லை . நேரே… ஜோவின் வீட்டை கண்டுபிடித்து அவர் முன் போய் நின்றது. ஜோவுக்கோ தன் கண்களையே நம்பவே முடியவில்லை. இது எப்படி நம்ம வீட்டை கண்டுபிடித்தது வந்தது என்று ஒரே ஆச்சரியம். இருவரும் ஆரத்தழுவிக் கொண்டனர்.

கண்களால் குசலம் விசாரித்துக் கொண்டனர். அந்த சந்திப்புக்கு பின், டின்டிம் ஜோவுடனேயே தங்கி விட்டது. இனப் பெருக்கத்திற்காக மட்டும் அர்ஜென்டினா, சிலி நாடுகளுக்கு டின்டின் செல்லும். இனபெருக்கம் முடிந்தவுடன் அங்கிருந்து 5 ஆயிரம் மைல் பயணித்து மீண்டும் ஜோவிடம் வந்து சேர்ந்ந்து கொள்ளும்.

இந்த அதிசய நிகழ்வு குறித்து ஜோ கூறுகையில், டின்டிம் எங்கேயிருந்தாலும் ஒவ்வொரு ஜூன் மாதமும் என்னிடம் வந்து விடும். பிப்ரவரியில் இனப்பெருக்க சமயத்தில் மட்டும்தான் என்னை விட்டு பிரிந்து செல்லும்.

ஒவ்வொருமுறையும் டின்டிம் இனிமேல் திரும்ப வராது என எனது நண்பர்கள் சொல்வார்கள். என்னோட டின்டிம் ஒவ்வொரு முறையும் எனது நண்பர்களின் கருத்தை பொய்யாக்கி விடுகிறது என சிலாகிக்கிறார் .