ஒருபுறம் மூளையில் ஆபரேசன்.. மறுபுறம் மியூசிக் கம்போசிங் : 9 வயது சிறுமியின் அசாத்திய செயல்..!!!

224

மத்தியப் பிரதேச……

9 வயது சிறுமிக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கும் போது, அவர் இசைக்கருவி வாசித்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் கவாலியர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி சௌமியா, இவருக்கு மூளையில் டியூமர் எனப்படும் கட்டி இருந்தது. இதற்காக, அவர் கவாலியர் பகுதியில் உள்ள பிஎம்ஐஆர் மருத்துவமனை மருத்துவர்களை அணுகினார். இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் தான் அகற்ற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இதற்கு அந்த சிறுமியின் பெற்றோரும் சம்மதித்ததைத் தொடர்ந்து, அறுவை சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தது. ஆனால் மருத்துவர்களுக்கு இந்த அறுவை சிகிச்சை சவாலாக இருந்தது.

பொதுவாக அறுவை சிகிச்சைகளின் போது நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுக்கப்படும். அதன் பின்னர் தான் அறுவை சிகிச்சை நடைபெறும். ஆனால், இந்த மூளை அறுவை சிகிச்சை செய்யும் போது, நோயாளி மயக்கமுடன் இருந்தால், அவருக்கு அறுவை சிகிச்சையில் ஏதேனும் தவறுகள் நடக்க வாய்ப்புகள் அதிகம் இருந்தன. அவரது மூளை செயல்பட்டுக்கொண்டிருக்கும் போதே அறுவை சிகிச்சை செய்தால்தான் தவறுகள் நடப்பது குறையும். அதனால், அதை எப்படி சாத்தியமாக்குவது என மருத்துவர்கள் ஆலோசித்தனர்.

இதில் சிறுமி செளமியாவிற்கு இசைக்கருவிகள் வாசிப்பது என்றால், அலாதி பிரியம் என்பதால் மருத்துவர்கள் சிறுமி இசைக்கருவி வாசித்துக்கொண்டிருக்கும் போது, அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிட்டனர். அதற்காக அவர்கள் தலை பகுதியில் மட்டும் செயல்படும்படியான மயக்க மருத்து அவருக்கு வழங்கப்பட்டது. அதன்பின், அறுவை சிகிச்சை துவங்கியது. சிறுமியும் இசைக்கருவியை வாசிக்கத் துவங்கிவிட்டார். சுமார் 2 மணி நேரம் தொடர்ந்து நடந்த அறுவை சிகிச்சையில் சிறுமியின் மூளையிலிருந்த கட்டி பாதுகாப்பாக அகற்றப்பட்டது.

தற்போது, அந்த சிறுமி முற்றிலும் மருத்துவர்களின் கண்காணிப்பிலிருந்து வருகிறார். சிறுமி இசைக் கருவி வாசிக்கும் போதே நடந்த இந்த அறுவை சிகிச்சை சம்பவம் சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.