6 வயது மகளை விற்ற தாய்

ஆப்கானிஸ்தானில் 6 வயது மகளை வறுமையின் காரணமாக தாய் விற்ற நிலையில் பலரும் இதுபோல செய்வது தெரியவந்துள்ளது. நாட்டின் பல இடங்களில் வறட்சி நிலவுவதால் மக்கள் பலர் பசியும் பட்டினியுமாக இருக்கின்றனர்.

இந்நிலையில் ஹெரத் நகரில் உள்ள முகாமில் மமரீன் என்ற பெண் தனது மூன்று பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இதையடுத்து தனது மகள் அகிலா (6)-வை நஜ்முதின் என்ற முதியவரிடம் விற்றுள்ளார். இது குறித்து மமரீன் கூறுகையில், எங்கள் ஊரில் கடும் வறட்சி ஏற்பட்டதால் இங்கு வந்துவிட்டோம்.

ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருந்ததால் என் மகள் அகிலாவை $3,000 பணத்துக்கு விற்றுள்ளேன். ஆனால் எனக்கு தற்போது வரை $70 பணம் மட்டுமே கிடைத்துள்ளது.

என் கணவர் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டார் என கூறியுள்ளார்.
சிறுமி அகிலாவை விலைக்கு வாங்கிய நஜ்முதின் கூறுகையில், சிறுமியின் குடும்பத்தாரிடம் கடுகளவு கூட பணமில்லை. அகிலாவை எனது 10 வயது மகன் ஷெர் ஆகாவுக்கு திருமணம் செய்து வைப்பேன் என கூறியுள்ளார்.

அந்நாட்டில் சிறுமிகளை வயதானவர்கள் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வுகளும் அதிகளவு நடக்கிறது. வறட்சி காரணமாக 275,000க்கும் அதிகமான மக்கள் தற்காலிக முகாமில் தங்கும் நிலை அங்கு ஏற்பட்டுள்ளது.