ஒரே நாளில் டிரெண்டிங்கான திருநங்கை மீரா! யார் இவர்? குவியும் நெட்டிசன்களின் பாராட்டுக்கள்!

451

திருநங்கை மீரா………….

விளம்பரங்கள் என்றாலே அழகான இளம்பெண்களை மையமாக வைத்தே எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் பீமா ஜுவல்லரி, திருநங்கையின் வாழ்வை மையமாக வைத்து எடுத்திருக்கும், நகைக்கடை விளம்பரப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சஞ்சலப்பட்ட மனதோடு கடற்கரையில் அமர்ந்திருக்கும் சிறுவனில் இருந்து விளம்பரம் தொடங்குகிறது. பதின்பருவ அச்சிறுவனுக்கு தாடி இல்லை. அதை தடவிப்பார்த்து தவிக்கிறான். சிறுவனின் தாயும், தந்தையும் அவன் தவிப்பை உணர்கிறார்கள்.

அந்த சிறுவனுக்கு ஒரு பரிசு கொடுக்கிறார்கள். அதை திறந்து பார்த்தபோது அதில் தங்கக்கொலுசு இருக்கிறது. அதை கால்களில் போட்டுக்கொண்டு மனம் சந்தோஷப்பட ஓடுகிறான்.

அவன் செய்கைகளை ஆழமாக உள்வாங்கியிருந்த பெற்றோர், தொடர்ந்து அவனுக்கு பெண்களைப் போல் காது குத்தி அழகு பார்க்கிறார்கள்.

பெண்களுக்கான உடையையும் அவர்களே அழைத்துப்போய் வாங்கிக் கொடுக்கிறார்கள். இப்போது சிறுவன், சிறுமியாக முற்றாக மாறிப் போகிறார். அவரது நீண்ட கூந்தலை அனுசரணையோடு தாய் கட்டிவிடுகிறார். கடைசியில் கை, கழுத்து நிரம்ப நகைகளோடு அவர் திருமணமேடைக்கு வருவதாக முடிகிறது விளம்பரம்.

ஒதுக்கப்படும் திருநங்கைகள்

மாற்றுப் பாலினத்தவராக மாறுவது மனதோடு தொடர்புடைய விஷயம் இல்லை. உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தினால் இது இயல்பாகவே நிகழ்கிறது. ஆனால், இதுகுறித்த புரிதல் இல்லாததாலும், பொதுவெளியில் பேசத் தயங்குவதாலுமே மூன்றாம் பாலினத்தவர்கள் வீட்டைவிட்டு வெளியேறும் சூழல் ஏற்படுகிறது.

இதேபோல் வீட்டில் இருக்கும் பெற்றோருக்கும் இதில் போதிய புரிதல் இல்லாததால் மூன்றாம் பாலினத்தவர் வீட்டில் இருக்க முடிவதில்லை. பெற்று வளர்த்த தாயைத் தவிர, மூன்றாம் பாலினத்தில் ஏதேனும் ஒருவர் அவர்களை தத்தெடுத்து வளர்த்து அச்சமூகத்தில் ஒருவராக வாழ வழிகாட்டுகின்றனர்.

பெற்றோர்கள் அனுசரணையாக இருந்துவிட்டால் இவர்கள் வீட்டைவிட்டு வெளியேறுவதும் தடுக்கப்படும். அப்படியான புரிதலையும் இந்த விளம்பரம் ஆழமாக கடத்துகிறது. 96 வருட பாரம்ரியம் கொண்ட பீமா ஜுவல்லரியின் இந்த விளம்பரம் கவனம் குவித்துள்ளது.

திருநங்கை மீரா

இந்த விளம்பரப் படத்தில் ஆணாக இருந்து பெண்ணாக மாறும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மீரா சிங்கானியா நிஜமாகவே திருநங்கை சமூகத்தை சேர்ந்தவர். டெல்லியில் உள்ள அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் சோஷியாலஜி பயிலும் மீரா, பொதுவெளியில் திருநங்கை சமூகத்தின் குரலை ஒலிப்பவர்.

அவர் இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘பொதுவாகவே திருநங்கைகளின் வாழ்வை சித்தரிக்கும் படங்கள், அவர்களுக்கான குரலைப் பேசுவதில்லை. இன்னும்சொல்லப்போனால் பொதுவெளியில் திருநங்கை சமூகத்தை கொச்சையாகப் பார்ப்பதற்கு எங்களின் உணர்வுகளை உயிரோட்டமாக காட்சிப்படுத்தாததும் காரணம். ஆனால் இந்த விளம்பரத்தில் திருநங்கைகளை மனிதாபிமானத்தோடு அணுகியிருக்கிறார்கள். இந்த கதையோட்டம் பிடித்ததாலேயே நடித்ததாக தெரிவித்துள்ளார்.