13 மாதங்களில் 3 முறை கொரோனா தாக்கம் : இளம் பெண் மருத்துவருக்கு நேர்ந்த சோகம்!!

469

ஸ்ருஷ்டி ஹலாரி..

இந்தியாவில் இளம் பெண் மருத்துவர் ஒருவருக்கு 13 மாதங்களில் 3 முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மாநகராட்சியில் உள்ள வீர் சாவர்க்கர் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான பிரிவில் 26 வயதாகும் மருத்துவர் ஸ்ருஷ்டி ஹலாரி (Shrusthi Halari) பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த ஆண்டு ஜூன் 17-ஆம் திகதி முதன்முதலில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானார். அந்த நேரத்தில் பெரிய அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருந்தது.

ஸ்ருஷ்டி தனது மூன்று மாத வேலையை முடித்துவிட்டு, தனது எம்.டி மற்றும் அமெரிக்காவில் உயர் மருத்துவ படிப்பிற்கான தயாரிப்புகளைத் தொடங்க தனது வீட்டிற்குத் திரும்பினார்.

தொடர்ந்து ஸ்ருஷ்டி கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டின் முதல் டோஸை இந்த ஆண்டு மார்ச் 8-ஆம் திகதியும், இரண்டாவது டோஸை ஏப்ரல் 29-ஆம் தேதியும் போட்டுக்கொண்டார்.

இருப்பினும், தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒரு மாதம் கழித்து மே 29-ஆம் திகதி மருத்துவர் ஸ்ருஷ்டி இரண்டாவது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இந்த முறை லேசான அறிகுறிகளுடன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

அதன் பின் மீண்டும் ஜூலை 11-ஆம் தேதி இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த முறை அவரின் குடும்பத்தில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டனர்.

இது குறித்து ஸ்ருஷ்டி கூறும் போது, மூன்றாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டதும் நான் அதிகம் கஷ்டப்பட்டேன். நானும் என் குடும்பமும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம். ரெம்டெசிவிர் மருந்து தேவைப்பட்டது.இப்போது, நான்காவது முறையாக கொரோனா இல்லை என்பதை உறுதி செய்வோம் என கூறினார்.

இது குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னர் கொரோனா பாதிப்பு ஏற்படாது என்பதில்லை. இரண்டு டோஸ் எடுத்துக்கொண்ட பிறகும் கொரோனா பாதிப்பு ஏற்படலாம்.

ஆனால், தடுப்பூசி செலுத்திக்கொண்டால் நோயின் தாக்கம் குறைவாகவோ, மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டிய அவசியம் இல்லாத வகையிலோ இருக்கும்.

தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் கொரோனா பாதிப்பு ஏற்படும்போது, அது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு இருக்காது என கூறினர்.