ஆகாயத்தில் ஒரு ஆலயம்: கயிலைக்கு அடுத்தபடியான பர்வதமலை ரகசியங்கள்!!

259

பர்வதமலை. இந்த மலை தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆதி சிவன் கைலாச மலையிலிருந்து இறங்கி தென் பகுதியில் நுழைந்த போது அவர் முதலில் கால் பதித்தது இங்குதான். அதற்கான தடயங்களாக இறைவனின் பாதங்கள் இங்கு இன்றும் இருக்கின்றன.

இறைவி பார்வதி தேவி தவம் செய்த காரணத்தால் இந்த மலை பர்வதமலை என பெயர் பெற்றது என்றும், மலைகளுக்கெல்லாம் மலையாக மிகுந்த உயரத்தில் இந்த மலை இருப்பதால் இந்த பெயர் வந்ததென்றும் கூறுகிறார்கள்.

பர்வதம் என்றால் மலை என்று பொருள். பர்வதமலை என்றாலும் மலைகளுக்கு மேலான மலை என்றும் பொருள்.இந்த மலை பல்வேறு அமானுஷ்யங்களை மற்றும் வரலாறுகளை தன்னுள் கொண்டுள்ளது. சோழர்கள் காலத்தில் பத்தாம் நூற்றாண்டில் இந்த இடத்தில் ஒரு நகரமே இருந்ததாக கூறப்படுகிறது.

முதலாம் ராஜராஜ சோழரின் அமைச்சரான ஜெயந்தன் பற்றிய பல குறிப்புகள் இங்குள்ள கல்வெட்டில் காணக்கிடைக்கின்றன. இந்த மலையின் உச்சியில் பெரு நகரத்தையே உருவாகியிருக்கின்றனர் சோழர்கள்.

ஆஞ்சநேயர் தூக்கி வந்த சஞ்சீவியின் மலையின் சில பாகங்கள் இங்கும் விழுந்துள்ளதாக ஐதீகம்.திருவண்ணாமலையில் உள்ள கோயில்களில் மிக முக்கியமாக வழிபட வேண்டிய கோயிலாக இந்த கோயில் பார்க்கப்படுகிறது.

கடல் மட்டத்தில் இருந்து 4560 அடி உயரமுள்ள இந்த மலையை ஏறி இறைவனை பார்ப்பது என்பது சிவன் மீது தீரா பற்றும் மற்றும் வைராக்கியம் கொண்டவர்களால் மட்டுமே முடியும்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே தென்பாதி மங்களம் மற்றும் கடலாடி ஆகிய இடங்களில் வழியாக இந்த மலையை சென்றடையலாம்.

மலை ஏறுவதற்கு முன் அங்குள்ள பச்சையம்மனையம் சப்தரிஷிகளையும் வணங்கி விட்டு அருகில் உள்ள ஆஞ்சநேயரிடம் ஏறுவதற்கான பலத்தை பிராத்தித்து விட்டு மலை ஏற தொடங்குவது அவசியம்.

கீழே மலையடிவாரத்தை அடையும்போதே நம் கண்களால் அந்த அதிசயத்தை காண முடியும். ஆம். நந்தி தேவரை இதுவரை கோயில்களில் சிவ சந்நிதிக்கு முன்பாக பார்த்திருப்போம்.

இங்கு ஒரு மலையே நந்தி வடிவில் இருந்து சிவனையும் பார்வதியையும் சுமக்கிறது என்பது இயற்கைக்கு மட்டுமே தெரிந்த மிக பெரிய ரகசியமாக இருக்க முடியும்.

இந்த கோயிலை சென்று சேர மலை பாதையில் 7கிமி தூரம் நடக்க வேண்டும். செங்குத்தான மலையில் ஏழு கிமி நடப்பது இறைவன் அருள் இருந்தால் மட்டுமே சாத்தியம்.

யாருக்கும் கிடைக்காத பல அற்புத மூலிகைகள் இந்த 5500 ஏக்கரா காட்டிற்குள் புதைந்து கிடக்கின்றன. இந்த மலையை ஒருமுறை ஏறி வந்தாலே உடலில் உள்ள நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.

நம் உடலில் உள்ள 7 சக்ரங்களில் கீழிருந்து மேலாக 7வது சக்ரத்தை திறப்பதுதான் முக்தி என கூறப்படுகிறது. அந்த வகையில் 6 மலைகளை கடந்துதான் ஏழாவது மலையான பர்வதமலையை அடைய முடியும். இந்த பர்வதமலைக்கு வந்து போனவர்களுக்கு முக்தி என்பது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட ஒன்று.

பூமியை விட்டு 4500 அடிக்கு மேல் குடி கொண்டுள்ள அம்மையப்பரின் பெயர் மல்லிகார்ஜுனர், தாய் பிரம்மராம்பிகா. ஸ்ரீசைலம் மலையில் வாழும் அதே சிவனின் பெயர்கள் தான் இங்கும் உள்ளன. அம்மன் வந்து உருவில் வருவதாகவும் தகவல் உண்டு.

இங்குள்ள சக்திகளில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால் இந்த இறைவனையும் இறைவியியையும் உருவாக்கி வழிபட்டவர் சித்தர் போகர்.

போகர் சித்தர் கைகளால் வழிபட்ட சிவனையும் அம்பாளையும் அங்கு செல்லும் பக்தர்கள் அவரவர் கைகளாலேயே வழிபடலாம் என்பது இங்குள்ள விசேஷம்.

இங்குள்ள இறைவனுக்கும் இறைவிக்கும் மற்ற தெய்வங்களுக்கும் கதவுகள் கிடையாது. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சென்று வழிபடுப்படியாக இந்த கோயில் இருக்கிறது.

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயிலை மீண்டும் புனரமைத்தனர் இங்கு 700 முறைக்கு மேல் வருகை தந்துள்ள திரு.விகாஷ் பாண்டியன் குழுவினர்.

இவ்வளவு உயரமான மலையில் கோயில் கட்டுவது என்பது இந்த காலத்தில் முடியாத காரியம்தான். அப்போது சோழர் யானை மற்றும் குதிரை படை மற்றும் வீரர்களை கொண்டு கோயில் கட்டினார்.

ஆனால் விகாஷ் பாண்டியன் குழுவினரோ அங்கு நடைபாதையாக சென்ற பக்தர்களிடமும் இரு மடங்கு சுமை கூலி கொடுத்து வேலையாட்களிடமும் கட்டுமான பொருட்களை கொடுத்து மிகுந்த சிரமத்துக்கிடையில் இறையருளுடன் இந்த பணியை செய்து முடித்துள்ளனர்.

ஒருமுறை வந்தாலே நினைத்த வரம் அருளி பக்தனுடன் நிரந்தரமாக வாழ தொடங்கிவிடும் சிவனும் அம்பாளும் அவர்களுக்காக வேண்டி விரும்பி கோயில் திருப்பணியை செய்த அனைவரையும் சும்மாவா விடுவார்கள்.

இந்த திருகாரியத்தில் ஈடுபட்ட அனைவரும் அவர்கள் வாழ்வில் நினைக்க முடியாத உயரத்தை அடைந்துள்ளனர்.

திருக்கோயிலை கட்டி முடித்த உடன் சிறிது நாட்களில் உள்ளூர்வாசிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த கோயிலை தமிழக அரசாங்கம் எடுத்து கொண்டது.

இன்றளவும் சித்தர்களும் தேவர்களும் முனிவர்களும் ரிஷிகளும் வந்து இங்குள்ள இறைவனையும் இறைவியையும் சூட்சு ரூபத்தில் வழிப்படுகின்றனர்.

நந்தியால் சுமக்கப்பட்டுள்ள இறைவனும் இறைவியும் பார்க்கும் அனைவரின் உயிரிலும் கலக்கின்றனர். அதனால்தானோ என்னவோ இந்த கோயிலில் எங்கு திரும்பினாலும் நந்தி சிலைகள்தான் காணப்படுகின்றன.

நந்தியின் பக்தர்கள் அனைவருக்கும் இந்த பர்வதமலை ஒரு காணக்கிடைக்காத சொர்க்கம்தான்.இங்கு வந்து வழிபட்டால் அறம் , பொருள், இன்பம், வீடு ஆகியவை ஒரே சமயத்தில் அமையும் என்று சிவபெருமானால் அருளப்பட்டுள்ளது.

சிவபக்தர்கள் ஒருமுறை இந்த மலை சென்று வழிபாட்டு வந்தால் கைலாச மலைக்கு செல்லும் பலன் கிடைக்கும். மேலும் கைலாச மலைக்கு செல்வதற்கு முதல்படியாக பர்வதமலை ஏறுவது நன்மை பயக்கும்.

யாரும் வந்து போக முடியாத அடர்வனத்திலும் எந்த விதமான அச்சமுமின்றி இம்மலை ஏற முடியும். அமாவாசை இருளிலும் இங்கு பாதைகள் தெளிவாக கண்ணிற்கு தென்படும். வழி தவறுபவர்களை அங்குள்ள பைரவர்கள் (நாய்கள்) வழிநடத்தி செல்வது இன்றளவும் கண்கூடான உண்மை.

இந்த கோயிலுக்கு செல்லுமுன் அதற்கான விவரங்களை சேகரித்து கொண்டு செல்ல வேண்டியது அவசியம்.

கூகுளை தேடினால் அதற்கான விவரங்கள் உங்களுக்கு கிடைக்கும். யூடியூபில் இதன் காணொளிகள் கிடைக்கின்றன. இந்த மலை பற்றிய விவரம் அறிந்தவர்கள் நிச்சயம் ஒருமுறையாவது போக விரும்புவார்கள்.

சிவன் மீது தீராக்காதல் கொண்டவர்கள் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டிய இடம் இந்த பர்வதமலை. ஒருமுறை சென்றால் பலமுறை நம்மை அழைக்கும் அற்புதமலையும் இதுதான்.