ஏலியன்களின் வாழ்விடம் எது? அங்கு அவர்கள் என்ன செய்கிறார்கள்?

955

கிட்டத்தட்ட 93 பில்லியன் ஒளியாண்டுகள் விட்டம் கொண்ட இந்த மாபெரும் பேரண்டத்தில் நாம் மட்டும் தனியாகத் தான் இருக்கிறோமா? ஏலியன் என்பது உண்மைதானா? இந்தக் கேள்வி எப்போதாவது உங்கள் மனதில் உதித்ததுண்டா?

நிறைய அறிவியலாளர்கள் மனதிலும் இதே கேள்வி உதித்திருந்தது. அவர்களுள் ஒருவர் ‘என்ரிகோ ஃபெர்மி’ (enrico fermi). 1950 இல் இது சம்பந்தமாக பல கேள்விகள் மற்றும் முரண்பாடுகளை அவர் முன்வைத்தார்.

சூரியனைப் போலவே ஒத்த வயதுடைய, ஏன் சூரியனை விடவும் மிகவும் பழமையான பல நட்சத்திரங்கள் இவ்வண்டத்தில் உள்ளன. அதீத நிகழ்தகவுப்படி பார்த்தால் கூட பூமியைப் போல ஒரு கோள் அவற்றில் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

அவற்றில் ஒரு வேளை உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருந்திருந்தால் இந்நேரம் அவை மனிதகுலத்தை விட ஒரு படி மேலே சென்று விண்மீன் பயணம் கூட மேற்கொண்டிருக்கலாம். எனில் பூமியை ஏற்கனவே வேற்றுக்கிரகவாசிகள் வந்து கண்காணித்து விட்டு சென்றிருக்கக் கூடும் என நினைத்தார் ஃபெர்மி. ஆனால் அவற்றை உறுதிப்படுத்துவதற்கான எந்தவொரு ஆதாரமும் அவரிடம் இல்லை, கிடைக்கவில்லை.

அப்போது அவர் எழுப்பிய கேள்வி ‘எல்லோரும் எங்கே?’ (where is everybody). இதைத் தொடர்ந்து அவர் எழுப்பிய கேள்விகளும் கூற்றுகளும் ‘ஃபெர்மியின் முரண்பாடுகள்’ (fermi paradox) என்றழைக்கப்படுகிறது.

ஃபெர்மி முரண்பாட்டின் முதல் அம்சம் என்னவெனில், பால் வீதியில் மட்டும் கிட்டத்தட்ட 200 400 பில்லியன் (2 4ஸ1011) நட்சத்திரங்கள் இருக்கக் கூடும். அதுவே நாம் காணக்கூடிய பிரபஞ்சத்தில் 70 செக்ஸ்டில்லியன் (70 ஸ 1022) நட்சத்திரங்கள் இருக்கக்கூடும்.

இதில் நிகழ்தகவுப்படி 0.00000001 சதவிகிதம் வேறோர் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தால் கூட இப்பிரபஞ்சத்தில் பல நாகரிகங்கள் தோன்றியிருக்க வாய்ப்புண்டு. இந்தச் சதவிகிதம் இன்னும் கொஞ்சம் அதிகம் இருந்தால் கூட பல ஆயிரம் நாகரிகங்கள் நம் பால்வீதியிலேயே தோன்றியிருக்கும்.

இதன் இரண்டாவது அம்சத்தின்படி பார்த்தால், பூமியில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக உயிர் வாழ்வதற்கான பொருட்களில் பற்றாக்குறை ஏற்பட்டுக் கொண்டே வருகிறது. நாமும் செவ்வாய் கிரகத்துக்குக் குடியேறுவது பற்றி சிந்திக்கத் தொடங்கிவிட்டோம்.

இதே போல் வேற்றுக்கிரக நாகரிகத்திலும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும். அவர்களும் இதே போல் புதிய வாழ்விடம் தேடி தங்கள் சூரிய குடும்பத்துக்குள்ளேயும், அருகில் உள்ள மற்ற நட்சத்திரக் குடும்பத்திலும் தேடியிருப்பார்கள். அங்கே புதிய வாழ்விடம் அமைக்க முயன்றிருப்பார்கள் எனில் இன்னும் நம் கண்களுக்கு ஏன் புலப்படவில்லை. அவர்கள் ஏன் பூமிக்கு வரவில்லை என்பதுதான்.

ஃபெர்மி முரண்பாட்டின்படி முன்வைக்கக்கூடிய இன்னொரு கேள்வி, சூரியனைவிடப் பழமையான நட்சத்திரங்கள் பல உண்டு இப்பிரபஞ்சத்தில். எனில் மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பே ஏலியன்கள் தோன்றியிருக்கக் கூடும் எனும்போது தொழில்நுட்பத்தில் நம்மை விட அவர்கள் ஒரு படி மேலே இருப்பார்கள்.

அப்படி என்றால் நம்மைப் போலவே ஆய்வு செய்ய ஆய்வுக்கலங்களை அவர்கள் அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் நாம் பார்த்தவரை வேற்றுக்கிரக ஆய்வுக்கலங்களையோ அல்லது அது சார்ந்த பொருட்களையோ நாம் இன்னும் காணவில்லையே, ஏன்?

இப்படியாகப் பல கேள்விகளுடனும், கூற்றுக்களுடனும் சென்று கொண்டிருக்கிறது ஃபெர்மி முரண்பாடு. 2003 இல் இங்கிலாந்தின் ‘ஓப்பன் யுனிவர்சிட்டியைச்’ (open university) சேர்ந்த ‘ஸ்டீபன் வெப்’ (stephen webb) என்ற இயற்பியலாளர் ஃபெர்மி முரண்பாடுகளுக்கான சில தீர்வுகளை முன்வைக்கிறார்.

வெப் கூறும் பல தீர்வுகளை மூன்று விதமாகப் பிரிக்கலாம்,1. அவர்கள் இங்கே தான் நமக்கு அருகில் இருக்கிறார்கள்,2. அவர்கள் இப்பிரபஞ்சத்தில் வேறெங்கோ இருக்கிறார்கள்,3. அப்படி ஒரு வேற்றுக்கிரகவாசிகளே இல்லை.

அவர்கள் இங்கே தான் நமக்கு அருகில் இருக்கிறார்கள்:

வேற்றுக்கிரகவாசிகள் அவ்வப்போது வந்து நம்மை பார்வையிட்டுச் செல்கிறார்கள். நமது அன்றாட வாழ்க்கையை அவர்களது விண்கலங்களில் வந்து பார்த்து செல்கிறார்கள்.

அவ்வப்போது யு.எஃப்.ஒ எனப்படும் வேற்றுக்கிரக விண்கலங்களை சிலர் பார்த்ததாகக் கூறும் கூற்றை வைத்து இதைத் தீர்வாகச் சொல்கிறார்.

அவர்கள் நமது சூரியக்குடும்பத்தில் தான் இருந்தார்கள் ஆனால் இப்போது இல்லை. 2001 மே 24 இல் வைக்கிங்1 (Viking 1) விண்கலம் செவ்வாய் கிரகத்தைப் புகைப்படம் எடுத்த போது மனித முகம் போலவே ஒரு தோற்றம் தென்பட்டது. அதை வைத்து இதை ஒரு தீர்வாக எடுத்துக்கொள்ளலாம்.

நாம் உயிரியல் பூங்காக்களில் உயிரினங்களைச் சென்று பார்வையிடுவது போலவே வேற்றுக்கிரகவாசிகளும் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் எனத் தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் இருக்கிறார்கள், ஆனால் நாம் எட்ட முடியாத தூரத்தில் இருக்கிறார்கள்:

வேற்றுக்கிரகவாசிகள் மிகவும் தொலைதூரத்தில் இருப்பதால் நம்மால் அவர்களையோ, அல்லது அவர்களால் நம்மையோ தொடர்புகொள்ள முடியாமல் இருக்கலாம்.

அவர்களுக்கு நம்மைப் போல் இப்பிரபஞ்சத்தில் இருக்கும் மற்ற உயிரினங்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் அவர்கள் வேலையை அவர்கள் செய்து கொண்டிருக்கலாம்.அவர்கள் நம்மைத் தொடர்புகொள்ள முயல்கிறார்கள்.

ஆனால் அதை எப்படி சாத்தியப்படுத்துவது என நமக்கு தெரியாமல் இருக்கலாம். காந்த அலைகள் மூலமாகவா, நியூட்ரினோ மூலமாகவா அல்லது வேறேதோ அலைகளின் மூலமாகவா. இன்டர்ஸ்டெல்லார் படத்தில் வருவது போல ஏதாவது குறியீடு வைத்து நாம் கண்டுபிடிக்க முயலலாம்.

நம்முடைய உலகளாவிய மொழியாகக் கணிதம் இருக்கிறது. அதே போல் அவர்களுடைய உலகளாவிய மொழியாக கணிதம் போல் வேறேதும் இருக்குமென்றால் இங்கு மொழி பிரச்சினையாகி நம்மால் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் போகிறது.