தாலி கட்டும் நேரத்தில் மயங்கி விழுந்த மணப்பெண்.. மயக்கம் தெளிந்ததும் சொன்ன பதில்.. கலவரம் ஆன கல்யாண வீடு!!

236

கர்நாடகா…..

கர்நாடகா மாநிலம் மைசூரின் சுன்னகேரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், எச்.டி.கோட்டே அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மைசூரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடப்பதாக இருந்தது. இதற்காக இரு வீட்டினரும் மண்டபத்தில் கூடினர்.

சடங்குகள் எல்லாம் முடிந்து நேற்று காலை, தாலி கட்டும் நேரம் வந்தது. அப்போது மணமகள் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தண்ணீர் தெளித்து அவரை ஆசுவாசப்படுத்தினர்.

மயக்கம் தெளிந்ததும் மணப்பெண், ‘எனக்கு இந்த திருமணம் வேண்டாம். என் காதலனை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்’ என கூறியுள்ளார்.

இதைக் கேட்டு மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து உறவினர்களிடம் விசாரித்த பின் தான், மணமகளும், பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபரும் காதலித்து வந்தது தெரியவந்தது. மேலும் மணப்பெண்ணின் பெற்றோர் வலுக்கட்டாயமாக திருமணம் ஏற்பாடு செய்ததும் தெரியவந்தது.

முதலில் இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காத மணப்பெண், தனது காதலன் இந்த திருமணத்தை நிறுத்துமாறு வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்பிய பின், மனம் மாறி விட்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த போலீசார், இரு தரப்பு வீட்டினரையும் காவல் நிலையம் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மணமகனின் குடும்பத்தார், இந்த திருமணத்துக்காக 5 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாக கூறினர். இதனை அடுத்து அந்த தொகையை மணமகள் குடும்பத்தார் கொடுத்ததை அடுத்து சுமுக தீர்வு ஏற்பட்டது.

இதனால் இரு தரப்பினரும் புகார் அளிக்காமல் திரும்பி சென்றனர். தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் உறவினர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.