தமிழகத்தில் ஊர் நாட்டமைகளால் இளைஞர் குடும்பத்துக்கு நேர்ந்த துயரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்ஸிஸ்.
இவரின் சகோதரியான சந்தனமேரி மாற்று சாதியைச் சேர்ந்தவரை 15 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இதனால் அந்த ஊரில் இருக்கும் நாட்டமைகள், அன்றே சந்தனமேரிக்கும் இந்த ஊருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது, கிராமத்தில் உள்ளவர்கள் அவர்களிடம் எந்தப் பேச்சுவார்த்தையும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து காதல் திருமணம் செய்து கொண்ட சந்தனமேரிக்கு குழந்தை பிறந்ததால், அவருடன் பிரான்ஸிஸ் மற்றும் அவரது தாய் மீண்டும் பேச ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் சந்தன மேரியின் மகள் பெரியவள் ஆகிறார் என்பதால் கடந்த 6-ஆம் திகதி பூப்புனித நீராட்டு விழா வைக்கப்பட்டுள்ளது.இதனால் பிரான்சிஸ் தன் அம்மா மற்றும் அப்பாவோடு நடுக்காவேரி முழுவதும் விழாவிற்கு அழைத்துள்ளனர்.
ஆனால் ஊரின் முக்கியஸ்தர்கள் ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டவள். அவள் வீட்டு தேவைக்கு நாங்கள் வர மாட்டோம் அதுமட்டுமின்றி ஊர் மக்கள் யாரும் செல்லவும் கூடாது எனவும் கூறியுள்ளனர்.
மனவேதனை அடைந்த பிரான்ஸிஸ் அதன் பின், தன் குடும்பத்தினரை மட்டும் அழைத்துக்கொண்டு விழாவை சிறப்பாக நடத்திவிட்டு ஊர் திரும்பியுள்ளார்.
ஊரின் கட்டுப்பாட்டை மீறி இவர்கள் சென்றதால், ஊரில் இருந்த சிலர் இவர்கள் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர்.
அதில் ஒரு சிலர் பிரான்ஸிசை கடுமையாக தாக்கியுள்ளனர். இது குறித்த சம்பவம் பொலிசாருக்கு தெரியவந்ததால், பொலிசார் காவல்நிலையத்தில் வைத்து பிரான்ஸிஸ் மற்றும் தாக்கியவர்கள் சிலரிடம் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் இதை மறக்காமல் இருந்த அவர்கள். ஊர் கோவில் மாத திருவிழாவின் போது, ஊர் முழுவதும் வரி வசூல் செய்துவிட்டு, இவர்கள் வீட்டில் மட்டும் வரி வசூல் செய்யாமல் சென்றுள்ளனர்.
பிரான்ஸிஸ் இதற்கிடையில் சென்னைக்கு வேலைக்கு சென்றுவிட்டதால், அவரின் தாய் அவரை தொடர்பு கொண்டு நம்ம வீட்டில் மட்டும் வரி வாங்கமாட்டீகிறாங்கா, ஏன் என்று கேட்டால் ஊர் பெரியவர்களை அவமானப்படுத்திய குடும்பத்தில் வரி வசூலிக்க மாட்டோம் என்று கூறுகிறார்கள் என்று அழுதுள்ளார்.
உடனடியாக சென்னை வந்த பிரான்ஸிஸ் இது குறித்து ஊர் பெரியவர்களிடம் கேட்ட போது,உங்களை ஊரைவிட்டு விலக்கி வைத்திருக்கிறோம். உங்க வரி பணம் ஒன்றும் எங்களுக்குத் தேவையில்லை என்று கூறியுள்ளனர்.
இதனால் மிகுந்த மன வேதனை அடைந்த பிரான்ஸிஸ் நடந்த துயரங்களை எல்லாம் விளக்கமாக எழுதி நேற்று நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.
அதன் பின் அவர்களிடம் வரிப்பணத்தை நாட்டாமைகள் பெற்றுக் கொண்டனர்.
பிரான்ஸிஸ் இன்று காலை வழக்கம் போல் கடைத் தெருவுக்கு சென்ற போது, அங்கிருந்த சிலர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தால் பெரிய ஆளா, எப்போதும் அதிகாரிகள் உன் அருகிலே இருப்பார்களா என்று மிரட்டியுள்ளனர்.
பிரான்ஸிஸ் நம்மால் ஏதும் நம் ஊருக்கும் திருவிழாவுக்கும் பிரச்னை வரக் கூடாது என ஒதுங்கியுள்ளார். இருப்பினும் ஏதேனும் பிரச்சனை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.