ஆணவக்கொலை

பினரய் ஆணவக்கொலை அடங்குவதற்குள் தெலங்கானாவில் மீண்டும் ஒரு ஆணவக் கொலை முயற்சி நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தின் சனத் பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்தீப் – மாதவி. காதலித்து வந்த இவர்கள் இருவரும் கடந்த வாரம் கோயில் ஒன்றில் திருமணம் செய்துகொண்டனர்.

சந்தீப் தாழ்ந்த சாதியை சேர்ந்தவர் என்பதால் மாதவியின் தந்தை மனோகர் இவர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, பெற்றோரின் எதிர்ப்பை மீறி இவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில், நேற்று மதியம் 3 மணி அளவில் சந்தீப்பை தொடர்புகொண்ட மனோகர் சாரி, “மகளைப் பிரிந்திருப்பது கவலையளிக்கிறது. இதனால் மாதவியை கூப்பிட்டுவந்து தன்னிடம் ஒருமுறை காண்பியுங்கள்” எனக் கூறியுள்ளார்.

இதை நம்பி சந்தீப், மாதவி இருவரும் அவர் சொன்ன இடத்துக்கு வந்து பைக்கில் காத்திருந்தனர். அப்போது, பின்னால் பைக்கில் வந்து நின்ற மனோகர் சாரி, பேக்கில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முதலில் சந்தீப்பை வெட்டினார். இதை மாதவி தடுக்கவே அவரையும் சரமாரியாக வெட்டினார். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து கிடந்த இருவரும் தற்போது பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மாதவிக்கு கை மற்றும் முகம் உள்ளிட்ட இடங்களிலும், சந்தீப்புக்கு கழுத்து பகுதியிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணின் தந்தை தலைமறைவாகியிருந்தார். இவரை பொலிசார் தேடிவந்த நிலையில், இன்று ஆச்சாரி எஸ். ஆர் நகர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.