தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு. குண்டடிபட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பவர்களின் படங்கள் சமூக வலைதளங்களை துயரக் கோலமாக்கியுள்ளன.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பல வருடங்களாக தூத்துக்குடி மக்கள் பல்வேறு வகையான போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை அறவழியில் மேற்கொண்டு வருகின்றனர். ஆலையின் அடுத்தகட்ட விரிவாக்கப் பணிகளை உடனே தடுத்து நிறுத்தக் கோரியும், ஆலையை மூடக்கோரியும் கடந்த பிப்ரவரி 14-ம் தேதியிலிருந்து தூத்துக்குடி மக்கள் தொடர்ச்சியாகப் போராடிவருகின்றனர்.
99 நாள்களாகப் போராடி வரும் மக்கள் நேற்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பெண்கள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 65 பேருக்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தமிழரசனின் இல்லத்திலிருந்த அவரது நண்பர்களிடம் பேசினோம். மக்களுக்காகப் போராட்டங்களில் கவனம் செலுத்தி வந்ததால் தமிழரசன் திருமணம் செய்து கொள்ளவில்லை.
அவரது அப்பா உயிருடன் இல்லை. அம்மா, அண்ணனின் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று போராட்டத்தின் போது எப்போதும்போல மக்களுடன் இணைந்து ஸ்டெர்லைட்டுக்கு எதிராகக் குரலெழுப்பியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோது , துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டுகள் தமிழரசனின் உயிரைப் பறித்தது.
`1996-ல இருந்தே ஸ்டெர்லைட்டுக்காக தமிழரசன் போராடிட்டு இருக்காரு. இந்தப் பிரச்னைக்கு மட்டுமல்ல மக்களுக்காகப் பல போராட்டங்கள்ல கலந்துருக்காரு. நேத்து அவர் எப்பவும் போல போராட்டக் களத்துல இருந்தப்ப வந்த துப்பாக்கிக் குண்டு, அவரோட நெத்திப் பகுதில மூளைக்குப் பக்கத்துல பாய்ஞ்சு அவரோட உயிர் போயிருச்சு.
அவர் சிவப்பு கலர்ல டீ-சர்ட் போட்டிருந்தாரு. அவரோட உடம்பு முழுக்க ரத்தம் சிதறி அவர் விழுந்து கிடந்த இடமே ரத்தக்காடா இருந்ததைப் பார்க்கமுடியலை. அது மட்டுமல்லாம அவரோட அண்ணனையும் போலீஸ் அரெஸ்ட் பண்ணிருக்காங்க. `ஏன் கைது பண்ணுனீங்க’னு தோழர்கள் கேட்டதுக்கு அவரு கறுப்புச் சட்டை போட்டிருந்தாருனு சொல்லிருக்காங்க” என்றார் அவரது நண்பர் வேதனையுடன்.