தன்னைத் திருமணம் செய்து 27வருட காலமாக தன்னுடன் இணை பிரியாது வாழ்ந்த தனது கணவரை விடவும் தன்னால் மீட்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்த நாய்களே பெரிதெனக் கருதி தனது கணவரிடமிருந்து விவாகரத்துப் பெற மனைவியொருவர் தீர்மானித்த விநோத சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
சப்போக் பிராந்தியத்தில் பம்ஹாம் எனும் இடத்தைச் சேர்ந்த லிஸ் ஹஸ்லாம் (49 வயது) என்ற பெண்ணே தனது கணவரான மைக்கை (53 வயது) விடவும் நாய்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கணவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றுள்ளார்.
நாய்கள் மீது அபிமானம் கொண்ட லிஸ் அநாதரவாகத் திரிந்த 30 நாய்களை மீட்டெடுத்து தனது செல்லப் பிராணிகளாக வீட்டில் வளர்க்க ஆரம்பித்திருந்தார்.
ஆரம்பத்தில் இரு படுக்கை அறைகளைக் கொண்ட தமது பண்ணை வீட்டில் ஓரிரு நாய்களை அவர் வளர்த்தபோது அது தொடர்பில் கண்டுகொள்ளாது இருந்த மைக், நாய்களின் தொகை வீட்டில் பல்கிப் பெருகியதையடுத்து பொறுமையிழந்தார்.
இந்நிலையில் அவர் தனது மனைவியிடம் நானா? அல்லது நாய்களா முக்கியம் என இரண்டில் ஒரு முடிவு எடுக்குமாறு எச்சரிக்கை விடுத்தார்.இதன்போது தனது நாய்களை பிரிய விரும்பாத லிஸ் நாய்களே பெரிது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மைக் லிஸ்ஸிடமிருந்து விவாகரத்துப் பெற்றுள்ளார். 1991ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்த அந்தத் தம்பதிக்கு 22 வயதில் ஒரு மகன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
லிஸ்ஸால் வளர்க்கப்படும் நாய்களில் குறைந்தது 15 நாய்கள் உடல் குறைபாடுகளைக் கொண்டுள்ளன. அந்த நாய்களில் 5 நாய்கள் செவிட்டுத் தன்மையைக் கொண்டுள்ளதுடன் இரு நாய்கள் தலா ஒரு கண்ணை மட்டுமே கொண்டுள்ளன. அதேசமயம் ஒரு நாய் மூளைச் சேதத்திற்குள்ளாகி நிதானமற்ற நிலையிலுள்ளது