மயிலாடுதுறை..

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே மயிலக்கோயில் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் மகள் இலக்கியா (வயது 28). இலக்கியாவுக்கும், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அன்புதாசன் என்பவரின் மகன் பாண்டியராஜனுக்கும் மூன்றாண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்தத் தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. திருமணமானதிலிருந்து கணவன்-மனைவியிடையே வரதட்சணைப் பிரச்னை இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாண்டியராஜன் வெளிநாடு சென்றுவிட்டு கடந்த ஏப்ரல் மாதம் கள்ளக்குறிச்சியிலுள்ள அவரின் சொந்த வீட்டுக்குத் திரும்பினார். இருவருக்குமிடையே மீண்டும் வரதட்சணை தொடர்பாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்தது. இந்த நிலையில், “கிரகக் கோளாறு. அதனால்தான் பிரச்னை வருது. சிலநாள்கள் உங்க வீட்டில் இரு. எல்லாம் சரியாகிடும். நான் வந்து அழைச்சுக்கிறேன்” என்று இலக்கியாவின் கணவர் அவரிடம் கூறினாராம்.

அதனால், இலக்கியா மயிலக்கோயில் கிராமத்திலுள்ள தன் தாய் வீட்டுக்கு குழந்தையுடன் கடந்த 10-ம் தேதி வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் பாண்டியராஜன் அனுப்பிய விவாகரத்து நோட்டீஸ் இலக்கியாவுக்கு அஞ்சல் மூலம் வந்தது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார் இலக்கியா. திருமணமான மூன்று ஆண்டுகளில் தனக்கு இப்படியொரு நோட்டீஸ் வரும் என்று எதிர்பார்க்காததால், அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து இலக்கியாவின் தந்தை குணசேகரன், ஆனைக்காரன் சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், “என் மகள் இலக்கியாவின் சாவில் சந்தேகம் இருக்கிறது. எனவே இது குறித்து நீதி விசாரணை நடத்தி, மகளின் சாவுக்குக் காரணமாக இருந்தவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

போலீஸார் வழக்கு பதிவுசெய்து, நேற்று சம்பவ இடத்துக்குச்சென்று இலக்கியாவின் உடலைக் கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து காவல் வட்டாரத்தில் விசாரித்தபோது, “திருமணமான மூன்று ஆண்டுகளில் இலக்கியா தற்கொலை செய்துகொண்டதால், அவரின் இறப்பு குறித்து சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா விசாரணை நடத்திவருகிறார். அவர் விசாரணை அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.