காதலித்ததால் தாறுமாறாக தாக்கப்பட்ட வாலிபர்: கட்டிப்பிடித்து காப்பாற்றிய சப் இன்ஸ்பெக்டர்.

537

கோயிலில் நடைபெற்ற கலாட்டா சம்பவத்தில் தாக்கப்பட்ட வாலிபர் ஒருவரை காவல்துறை அதிகாரி கட்டிப்பிடித்து காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடால் பகுதி கோயில் ஒன்றிற்கு கடந்த 22ஆம் தேதி இஸ்லாமிய இளைஞர் ஒருவர் வந்துள்ளார். கோயில் வளாகத்தில் ஒரு இடத்தில் தனது தோழியை சந்தித்து அவரோடு பேசியிருக்கிறார் இந்த இளைஞர். கோயிலுக்குள் வெகு நேரமாக சிரித்து பேசியபடி இருந்த இவர்களை நோக்கி ஒரு குறிப்பிட்ட அமைப்பினர் வந்திருக்கின்றனர்.

இதனை பார்த்ததும் அந்த பெண் அங்கிருந்து நகர்ந்து விட்டார். இதனையடுத்து அந்த இளைஞரை சரமாரியாக வசைபாடத் துவங்கிய அமைப்பினர் ஒரு கட்டத்திற்கு பின் அவரை அடிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

அப்போது அங்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் சுகன்தீப் சிங் என்ன நடந்தது என்று விசாரித்திருக்கிறார். விசாரித்து கொண்டிருக்கும்போதே அந்த அமைப்பினர் இளைஞரை மீண்டும் தாக்கியுள்ளனர். உடனடியாக இளைஞரை கட்டியணைத்து அந்த இடத்திலிருந்து பாதுகாப்பாக கூட்டி சென்றிருக்கிறார் சுகன்தீப் சிங்.

இந்த சம்பவம் தொடர்பான காணொளியும் புகைப்படங்களும் தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது. மக்கள் அனைவரும் சப் இன்ஸ்பெக்டர் சுகன்தீப் சிங்கை பாராட்டி வருகின்றனர்.