காதல் திருமணம் செய்து கொண்ட மகன் : ஆத்திரத்தில் மொத்த குடும்பமும் செய்த கொடூர செயல்!!

1111

கொடூர செயல்

இந்தியாவில் மகன் மற்றும் மருமகள் மீதுள்ள ஆத்திரத்தில் அவர்களின் குழந்தையை கொடூரமாக கொலை செய்த குடும்பத்தாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்தவர் சித்த ராஜூ. இவர் மனைவி விஜயலட்சுமி. தம்பதிக்கு கார்த்திக் மற்றும் அரவிந்த் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

ஸ்டெல்லா என்ற பெண்ணை கார்த்திக் காதலித்த நிலையில் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். மேலும், பெற்றோர் மற்றும் சகோதரர் அரவிந்த் வசிக்கும் வீட்டுக்கு எதிரிலேயே கார்த்திக், ஸ்டெல்லாவுடன் குடிவந்தார். இதனால் மூவருக்கும் கார்த்திக் மற்றும் ஸ்டெல்லா மீது ஆத்திரம் வந்தது.

இதோடு, சகோதரன் கார்த்திக்கு மட்டும் திருமணம் ஆகிவிட்டதே, நமக்கு திருமணம் ஆகவில்லையே என அரவிந்துக்கு ஆதங்கம் இருந்தது. இந்நிலையில் கார்த்திக் – ஸ்டெல்லா தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்தது.

அதில் ஒரு குழந்தைக்கு சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனதால் மருந்து வாங்க கார்த்திக் வெளியில் சென்றார். அப்போது சித்த ராஜூ மற்றும் அரவிந்த் கொடுத்த ஐடியா படி விஜயலட்சுமி, கார்த்திக் வீட்டுக்கு சென்றார்.

அங்கு சென்று தனது மருமகள் ஸ்டெல்லாவிடம் அன்பாக இருப்பது போல பேசினார். அப்போது ஒரு குழந்தையுடன் ஸ்டெல்லா படுக்கையறையில் இருந்த நிலையில் இன்னொரு குழந்தை ஹாலில் இருந்தது. இதையடுத்து தன்னிடம் இருந்த துணியால் அந்த குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற விஜயலட்சுமி சடலத்தை படுக்கைக்கு அடியில் வைத்து விட்டு சென்று விட்டார்.

இதையடுத்து குழந்தையை காணாமல் தவித்த ஸ்டெல்லா தனது மாமியார் மற்றும் குடும்பத்தார் மீது கணவர் உதவியுடன் பொலிசில் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்து பொலிசார் தேடிய போது குழந்தையின் சடலம் கிடைத்தது.

இதையடுத்து சித்த ராஜூ, விஜயலட்சுமி மற்றும் அரவிந்தை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.