குடும்பத்துடன் வேறு ஊரில் குடிபெயர்ந்த தமிழர் : ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன ஆச்சரியம்!!

517

கேரளாவில் குடும்பத்துடன் வசித்து வந்த தமிழருக்கு லாட்டரியில் ரூ 5 கோடி பரிசு விழுந்துள்ள நிலையில் அவர் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றுள்ளார்.

தமிழ்நாட்டின் திருநெல்வேலியை சேர்ந்தவர் செல்லையா. இவர் மனைவி சுமதி. தம்பதிக்கு சஞ்சிவ் மற்றும் செல்வ நமீதா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் பிழைப்பை தேடி குடும்பத்தாருடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவுக்கு வந்தார் செல்லையா.
அங்கு ஹொட்டலில் வேலை செய்து வந்த நிலையில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

ஓராண்டுக்கு முன்னர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் தொழிலை செல்லையா தொடங்கிய நிலையில் லாட்டரி நிறுவன ஏஜன்சியிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை வாங்கி விற்பனை செய்து வந்தார்.

சமீபத்தில் பம்பர் லாட்டரி சீட்டுகளை செல்லையா விற்பனை செய்த நிலையில் அவரிடம் இருந்த இரண்டு சீட்டுகள் மட்டும் விற்பனையாகவில்லை. வாடிக்கையாளர்களிடம் அதை வாங்கிகொள்ளும்படி செல்லையா வலியுறுத்தியும் அவரை அலட்சியம் செய்தார்கள்.

பின்னர் விற்பனையாகாத இரண்டு லாட்டரி சீட்டுகளுடன் செல்லையா வீட்டுக்கு சென்ற நிலையில் அன்று மாலை அந்த லாட்டரி சீட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் செல்லையாவிடம் இருந்த இரண்டு சீட்டில் ஒரு சீட்டுக்கு பம்பர் பரிசான ரூ 5 கோடி விழுந்தது தெரியவந்தது.

இதையடுத்து தனக்கு ரூ 5 கோடி பரிசு கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சியடைந்துள்ளார் செல்லையா. இது குறித்து அவர் கூறுகையில், என் பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பரிசு பணத்தை வைத்து வீடு கட்ட விரும்புகிறேன் என புன்முறுவலுடன் கூறியுள்ளார்.