கண்கலங்கிய பயணிகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் தண்டவாளத்தில் சிக்கிய மகனை பத்திரமாக கரையேற்றிய தாய், அடுத்த நிமிடமே ரயிலில் சிக்கி இறந்துள்ள சம்பவம் அங்கிருந்த பயணிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன் தன்னுடைய மனைவி ரேவதி மற்றும் 12 வயது மகன் தனுஷ் உடன் சென்னை செல்வதற்காக ரயில் நிலையம் வந்துள்ளனர்.

அப்போது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வருவதற்காக லட்சுமணன் சென்றுவிட்டார். இதற்கிடையில் அவருடைய மனைவி ரேவதி தண்டவாளத்தை கடந்து நடைபாதைக்கு சென்றுவிடலாம் என மகனை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.

அப்போது அதே தண்டவாளத்தில் திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில் வேகமாக வருவதை பார்த்த பயணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர். உடனே சுதாரித்து கொண்ட ரேவதி, வேகமாக தன்னுடைய மகனை நடைபாதையின் மேல் ஏற்றிவிட்டு, தானும் தப்ப முயற்சித்துள்ளார்.

ஆனால் அதற்கும் வேகமாக வந்த ரயில், பயணிகளின் கண்முன்னே அவர் மீது ஏற்றி சென்றுவிட்டது. இதில் ரேவதி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகியுள்ளார்.

இந்த கொடூரமான சம்பவத்தை அங்கு நேரில் பார்த்த பயணிகள் பலரும் கண்களில் நேர் ததும்ப நின்றுள்ளனர். பின்னர் சம்பவம் அறிந்து வந்த ரயில்வே பொலிஸார், ரேவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.