திருமணமான ஒன்றரை ஆண்டில் பயங்கரம் : இளம் காதல் மனைவி அடித்துக்கொலை செய்த கணவர்!!

1032

ஆம்பூர் மாவட்டத்தில் திருமணமான ஒன்றரை வருடத்தில் காதல் மனைவியை அடித்துக்கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நந்தினி(19), ஞானமூர்த்தி(24) ஆகிய இருவரும் காதலித்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு திக்கீஸ் என்ற 8 மாத ஆண் குழந்தை உள்ளது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஞானமூர்த்தி அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் பிரச்சனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்,

வழக்கம்போல குடித்துவிட்டு வந்து தனது மனைவியுடன் பிரச்சனை செய்துள்ளார். தகராறின்போது வீட்டில் இருந்த டிவி, கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை ஞானமூர்த்தி உடைத்துள்ளார். மேலும் அவர், நந்தினியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த நந்தினி அதே இடத்தில் பரிதாபமாக இறந்துள்ளார்.

அதன்பின்னர், மனைவியின் கழுத்தில் சேலையை மாட்டி தூக்கில் தொங்கவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டு பொருட்கள் உடையும் சத்தம் கேட்டு சிறிது நேரத்தில் எதுவும் நடமாட்டம் இல்லாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.

அப்போது நந்தினியின் சடலம் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உமராபாத் பொலிசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், நந்தினியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன்பின்னர் வாழைத்தோப்பில் மறைந்திருந்த ஞானமூர்த்தியை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.