துணை அதிபராக தேர்வாகும் முதல் பெண் நான்; ஆனால் கடைசி பெண் அல்ல! கமலா ஹாரிஸ்!!

448

கமலா ஹாரிஸ்……….

அமெரிக்க வரலாற்றில் துணை அதிபராக தேர்வாகும் முதல் பெண் நான், ஆனால் கடைசி பெண் அல்ல என அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழ் பெண் கமலா ஹாரிஸ் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் உரையாற்றியபோது குறிப்பிட்டார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இதன் மூலம் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதே வேளையில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தேர்வாகியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் தெற்கு ஆசியாவைச் சேர்ந்த அமெரிக்காவின் பெண் துணை அதிபர் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு தனது ஆதரவாளர்கள் மத்தியில் கமலா ஹாரிஸ் உரையாற்றினார். இதன்போது அவர் கூறியதாவது, ஜனநாயகத்தைக் காப்பாற்றி, வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.

பெருவாரியாக வாக்களித்து ஜனநாயகத்தைக் காப்பாற்றிய மக்களுக்கு நன்றி. நாட்டு மக்கள் மீது ஜோ பைடன் வைத்திருக்கும் அளவில்லாத அன்பே எனது வெற்றிக்குக் காரணம்.

ஜனநாயகம் என்பது ஒரு நிலை அல்ல அது ஒரு செயல். கணவர் உள்பட குடும்பத்தினர் அனைவரின் அன்புக்கும் நன்றி. நம்பிக்கையுடன் அமெரிக்காவுக்கு வந்த தனது தாயை இந்த தருணத்தில்நினைவவு கூர்கிறேன்.

கனவுகள் சாத்தியமாவதற்கு எனது வெற்றியே இளம் தலைமுறையினருக்கு உதாரணம். யாருக்கு வாக்களித்து இருந்தாலும் அனைத்து அமெரிக்கர்களுக்காகவும் உழைப்பேன்.

துணை அதிபராகத் தேர்வாகியுள்ள முதல் பெண் நான். கடைசிப் பெண் அல்ல. இது துவக்கமே ஒரு பெண்ணை துணை அதிபராகத் தேர்வு செய்யும் துணிச்சல் பைடனுக்கு இருக்கிறது. இனவெறியை அகற்றுவோம் என உறுதிப்படக் கூறுகிறேன் என அவர் இதன்போது தெரிவித்தார்.