இத்தாலியில்..
இத்தாலியில் கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டின் மொட்டைமாடியில் சந்தித்து காதலை வளர்த்த ஜோடி ஒன்று, தாங்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இத்தாலியின் வெரோனா பகுதியிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. கொரோனா உச்சமடைந்திருந்த காலகட்டத்தில் இத்தாலியில் கடுமையான ஊரடங்கு விதிகள் அமுலில் கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையிலேயே வீட்டு பால்கனியில் 40 வயதான பாவோலா அக்னெல்லி என்பவரும் 38 வயதான மைக்கேல் டி ஆல்பாஸ் என்பவரும் சந்தித்துக் கொண்டுள்ளனர்.
ஊரடங்கு காலகட்டத்தில் பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில் வெரோனா பகுதியில் தினசரி மாலை 6 மணியளவில் மொட்டைமாடி இசை நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டது.
சட்டத்தரணியான பாவோலாவின் சகோதரி இந்த இசை நிகழ்ச்சிகளில் வயலில் வாசித்து வந்துள்ளார். அவருக்கு பாவோலா உதவியாக இருந்துள்ளார். இந்த நிலையில் தான் ஒருமுறை பாவோலா எதிர்வீட்டு பால்கனியில் டி ஆல்பாசை முதன்முறையாக சந்தித்துள்ளார்.
இது பல நாள் தொடர்ந்த நிலையில், டி ஆல்பாஸ் பாவோலாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் வழியாக தொடர்புகொள்ள தொடங்கினார். ஆனால் இருவரும் நேருக்கு நேர் சந்திக்க முடியாத சூழல் இருந்த போதும், மொபைல் வாயிலாக தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர்.
இறுதியில் கடந்த மே மாதம் முதன்முறையாக இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டுள்ளனர். தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளனர்.
எதிரெதிர் குடியிருப்பில் வாழ்ந்து வந்தாலும், கொரோனா ஊரடங்கு தங்களை வாழ்க்கையில் இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.