நடிகர் அர்ஜுன்
நடிகர் அர்ஜுன் மற்றும் அவரின் ஊடக மேலாளர் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பெங்களூர் காவல் நிலையத்தில் முறையான புகார் அளித்துள்ளார்.
நிபுணன் என்ற திரைப்படத்தில் நடிகர் அர்ஜுனுடன் இணைந்து நடித்த போது அவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீ டூ இயக்கம் மூலம் கூறினார். ஆனால் இதை அர்ஜுன் மறுத்து ஸ்ருதியிடம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் அர்ஜுன் மற்றும் அவரின் ஊடக மேலாளர் பிரசாந்த் சம்பர்கி மீது ஸ்ருதி பெங்களூர் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்துள்ளார்.
பிரசாந்துக்கு எதிரான புகாரில், வியாழக்கிழமை நடந்த கர்நாடகா ஃபிலிம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். அப்போது அர்ஜுனின் ஊடக மேலாளரான பிரசாந்த், அர்ஜுனுக்கு எதிராக நான் குற்றச்சாட்டுகளை கூற சர்வதேச நிறுவனங்கள் எனக்கு பணம் கொடுத்தன என ஊடகங்களிடம் கூறினார்.
இதோடு என்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார் என தெரிவித்துள்ளார். இதையடுத்து பொலிசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாக அர்ஜுன் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.